பரபரக்கும் தேர்தல் களம்: பாஜக தலைமையிடம் இருந்து அண்ணாமலைக்கு பறந்த அழைப்பு… முழு விவரம் உள்ள!
Bjp Former Leader K. Annamalai: தமிழக பாஜகவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று பாஜக மையக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு கட்டாய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிடம் இருந்து அண்ணாமலைக்கு பறந்த அழைப்பு
தமிழகத்தில் ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 6- ஆம் தேதி நிறைவடைய உள்ளது அதன்படி, வேட்பு மனு தாக்கலுக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து 2 நாட்களே உள்ளன. ஆனால், பாஜக வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதனால், பாஜகவில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதில் குழப்பம் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. அதில், பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளில் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அதில், அண்ணாமலையின் பெயர் இடம் பெறவில்லை. இதனிடையே, மொடக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவதற்கு பாஜக தலைமை வலியுறுத்துவதாகவும், ஆனால், கோவை வடக்கு பகுதியில் போட்டியிட அண்ணாமலை விருப்பம் தெரிவிப்பதாகவும் பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
வேட்பாளர்கள் பட்டியலுடன் பியூஷ் கோயல் சென்னை வருகை
இந்த நிலையில், பாஜக வேட்பாளர்கள் பட்டியல் குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக மத்திய அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல் அண்மையில் சென்னை வந்து, உத்தேச பட்டியலை டெல்லிக்கு எடுத்துச் சென்றதாக தெரிகிறது. டெல்லியில், இந்த உத்தேச பட்டியல் தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலுடன் பியூஷ் கோயல் இன்று ( ஏப்ரல் 3) சென்னை வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதன்படி, பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக மையக்குழு நிர்வாகிகள் கூட்டம்
இந்த நிலையில், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்து அங்கிருந்து புதுச்சேரி செல்ல உள்ளார். அங்கு, பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து, சென்னை திரும்பும் பிரதமர் மோடி நாளை சனிக்கிழமை ( ஏப்ரல் 4) பாஜக மையக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தனியார் ஹோட்டலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
அண்ணாமலைக்கு கட்டாய அழைப்பு
இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அவர் இன்று இரவு சென்னை திரும்புகிறார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று அண்ணாமலை கூறி இருந்த நிலையில், அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: P. Geetha Jeevan Tamil Nadu Election: திமுகவில் ஒரே பெண் அமைச்சர்… தூத்துக்குடி தொகுதியை தக்க வைப்பாரா கீதா ஜீவன்!