AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு.. உட்கட்சி பூசலை தீர்க்க நிர்வாகிகளுக்கு அதிரடி வாக்குறுதிகள்!!

Tamilnadu Assembly Election: இந்தத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்திருந்த நிலையில், 164 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சீட் கிடைக்காத பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகத் தலைமைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு.. உட்கட்சி பூசலை தீர்க்க நிர்வாகிகளுக்கு அதிரடி வாக்குறுதிகள்!!
முதல்வர் ஸ்டாலின்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 03 Apr 2026 14:00 PM IST

Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு ஏற்பட்டுள்ள அதிருப்திகளைச் சரிசெய்யவும், தேர்தல் பணிகளை முடுக்கிவிடவும் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 234 தொகுதிகளிலும் உள்ள அக்கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், தமிழகம் முழுவதும் உள்ள 70க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள், 700க்கும் மேற்பட்ட ஒன்றியச் செயலாளர்கள், நகர மற்றும் பகுதிச் செயலாளர்கள் என மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதையும் படிக்க: நேரடி அரசியல் களத்தில் சபரீசன்.. டெல்லியே அடுத்த டார்கெட்?.. திமுகவின் புதிய வியூகம்..

அதிருப்தியாளர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சி:

இந்தத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்திருந்த நிலையில், 164 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சீட் கிடைக்காத பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகத் தலைமைக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்தவகையில், தி.நகர் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ கருணாநிதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, ராஜா அன்பழகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு தேர்தல் பணிகள் இன்னும் முழுவீச்சில் தொடங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. தாம்பரம் தொகுதியில் எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்ட சில நிர்வாகிகளிடையே நிலவும் கசப்புகளைத் தீர்க்க தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இப்படி பல்வேறு தொகுதிகளிலும் உட்கட்சிக்குள் நடக்கும் குழப்பங்களை தீர்க்கும் வகையில், இந்த ஆலோசனை நடைபெற்றது.

முதல்வரின் முக்கிய அறிவுறுத்தல்கள்:

அந்தவகையில், இன்று நடந்த ஆலோசனையின் போது முதல்வர் ஸ்டாலின் நிர்வாகிகளுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன்படி, “சீட் கிடைக்கவில்லை என்பதற்காக மற்ற வேட்பாளர்களைத் தோற்கடிக்க முயலக்கூடாது. உட்கட்சி கசப்புகளை மறந்து உதயசூரியன் சின்னத்தின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும்”. இப்போது வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்ற உறுதியை முதல்வர் அளித்தார்.

மேலும், திமுக போட்டியிடும் தொகுதிகள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் ஒரு வாக்கு கூட சிதறாமல் அவர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். 2016-ல் திருமாவளவன் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கக்கூடாது என எச்சரித்தார்.

இதையும் படிக்க: “நாங்கள் சங்கி என்றால், பாஜகவோடு கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா?”.. முதல்வருக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!!

200 தொகுதிகள் இலக்கு:

திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்கு என்று குறிப்பிட்ட முதல்வர், அதற்காகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இப்போதிலிருந்தே தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னதாக, அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையையும் (War Room) முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Follow Us