சட்டபேரவையில் நெகிழ்ச்சி சம்பவம்.. கண்ணீர் மல்க பதவியேற்ற மோகன் எம்எல்ஏ!
Panruti MLA Mohan : தமிழக சட்டப் பேரவையில் எம். எல். ஏ.வாக பதவி ஏற்ற பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ மோகன் ஜெயலலிதா படத்தை பார்த்து கண்ணீர் மல்க அழுததுடன், பதவி ஏற்றார். இந்த நிகழ்வு சட்டப்பேரவையில் நெகிழ்ச்சியான சம்பவமாக பதிவானது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 233 வேட்பாளர்கள் சட்ட பேரவையில் எம்எல்ஏக்களாக இன்று திங்கள்கிழமை ( மே 11- ஆம் தேதி) பதவி ஏற்றனர். இதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவி ஏற்றார். இவரை தொடர்ந்து, தியாகராய நகர் எம்எல்ஏவாக என். ஆனந்த், வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏவாக ஆதவ் அர்ஜுனா, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி தொகுதி எம்எல்ஏவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட பலர் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர். அப்போது, கடலூர் மாவட்டம், பண்ருட்டி சட்டமன்ற தொகுதியின் அதிமுக எம்எல்ஏ மோகன் உறுதிமொழி கூறி பதவியேற்றார். அப்போது, ஜெயலலிதா படத்தை கையெடுத்து கும்பிட்டு வணங்கியதுடன், கண்ணீர் மல்க பதவி ஏற்றார்.
கண்ணீர் மல்க அழுதவாறு பதவியேற்ற அதிமுக எம்எல்ஏ
இது சட்டப்பேரவையில் நெகிழ்ச்சியான சம்பவமாக நிகழ்ந்தது. இதில், மோகன் எம்எல்ஏ, பதவி ஏற்கும் போது கூறியதாவது: சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கா. மோகன் என்னும் நான் சட்டமுறைப்படி நிறுவப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம். அந்த சட்டத்தின் உண்மையான நம்பிக்கையும், பற்றுறுதியையும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டு ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையாக நிலை நிறுத்துவேன் என்றும் கடவுள் அறிய உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வழக்கமாக இருந்து வரும் நிகழ்வு
அப்போது, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா நான் முதல்முறையாக சட்டமன்றத்துக்குள் வந்துள்ளேன் என்று கண்ணீர் மல்க இரு கைகளை எடுத்து கும்பிட்டு தெரிவித்தார். பொதுவாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம் எல் ஏக்கள் மற்றும் அமைச்சர்களாக பதவி ஏற்கும் வேட்பாளர்கள் தங்களது கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரை நினைவு கூர்ந்து கண்ணீர் மல்க பதவி ஏற்பதும், அவர்கள் பெயரை குறிப்பிட்டு பதவி ஏற்பதும் வழக்கமாக உள்ளது.
விஜய்யை பார்த்து கடவுள் அறிய என கூறிய பதவியேற்ற வேட்பாளர்
அதன்படி, தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பதவி ஏற்கும் போது, கடவுள் ஆணையாக என்று கூறுகையில், தவெக தலைவரும், முதல்வருமான விஜயை நோக்கி கை காண்பித்து பதவி ஏற்றார். இதே போல, தமிழக வெற்றி கழகத்தின் மற்றொரு எம்எல்ஏவும் விஜயை நோக்கி கடவுள் எனக்கூறி பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக உறுதி மொழி ஏற்று பதவி ஏற்று கொண்டனர்.