திமுக அமைச்சர்களுக்கு எதிராக நேரடி போட்டியை தவிர்த்த அதிமுக… என்ன காரணம்!
AIADMK avoids 14 constituencies: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமைச்சர்கள் 14 பேரின் தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுவதை தவிர்த்துள்ளது. அத்துடன், அந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

திமுக அமைச்சர் தொகுதிகளில் நேரடி போட்டியை தவிர்த்த அதிமுக
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் போட்டியிடக்கூடிய தொகுதிகள் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று புதன்கிழமை ( மார்ச் 25) வெளியிட்டார். இதில், திமுகவில் தற்போது அமைச்சர்களாக இருந்து வரும் 14 பேரின் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கி உள்ளது. மேலும், இந்த தொகுதிகளில் திமுக அமைச்சர்களை எதிர்த்து அதிமுக நேரடியாக போட்டியிடுவதை தவிர்த்துள்ளது. அதன்படி, அமைச்சர் எ. வ. வேலுவின் தொகுதியான திருவண்ணாமலை, பெரிய கருப்பன் தொகுதியான திருப்பத்தூர், மனோ தங்கராஜ் தொகுதியான திருச்செந்தூர், மதிவேந்தன் தொகுதியான ராசிபுரம் ஆகிய தொகுதிகளை அதிமுக, பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இதேபோல, கே. என். நேரு தொகுதியான திருச்சி மேற்கு, டி. ஆர். பி. ராஜா தொகுதியான மன்னார்குடி, மா. சுப்பிரமணியன் தொகுதியான சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகள் அமமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு
மேலும், சக்கரபாணி தொகுதியான ஒட்டன்சத்திரம், முத்துசாமி தொகுதியான ஈரோடு மேற்கு, ஆர். காந்தி தொகுதியான ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திரன் தொகுதியான சேலம் வடக்கு பாட்டாளி மக்கள் கட்சிக்கும், எஸ். எஸ். சிவசங்கர் தொகுதியான குன்னம் இந்திய ஜனநாயக கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழக சட்டமன்ற தேர்தலில், 14 தொகுதிகளில் திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுவதை தவிர்த்து உள்ளது.
மேலும் படிக்க: கமலின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும். டார்ச் லைட்டுக்கு அனுமதி – மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை
கூட்டணி கட்சிகளுக்கு 64 தொகுதிகள் ஒதுக்கீடு
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு 27 சட்டமன்ற தொகுதிகள், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 சட்டமன்ற தொகுதிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 11 சட்டமன்ற தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 சட்டமன்ற தொகுதிகள் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு ஒரு சட்டமன்ற தொகுதிகள் இந்திய ஜனநாயக கட்சிக்கு 2 சட்டமன்ற தொகுதிகள் என சுமார் 64 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், 14 சட்டமன்ற தொகுதிகளில் எம்எல்ஏக்களாக திமுக அமைச்சர்கள் இருந்து வருகின்றனர்.
அதிமுக வெற்றி பெறக்கூடிய தொகுதிகள் குறையும்
இந்த தொகுதிகளில், அந்த அமைச்சர்களுக்கு வெற்றி வாய்ப்பு மீண்டும் கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மேற்கண்ட தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிட்டால், அதிமுக வெற்றி பெறக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாக எண்ணி, அந்த தொகுதிகளை தனது கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக தலைமை ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மேற்கண்ட தொகுதிகளில் தோல்வி ஏற்பட்டால் அது கூட்டணி கட்சிகளுக்கு சென்று விடும் எண்ணத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் படிக்க: ஒரே வாரத்தில் 4 நாட்கள் விடுமுறை.. வேட்புமனு தாக்கல் செய்வதில் சிக்கல்.. திகைக்கும் வேட்பாளர்கள்..