Year Ender 2025: இந்த ஆண்டு தங்கத்தின் விலை உயர்ந்ததற்கான காரணம் என்ன? – 2026ல் எப்படி இருக்கும்?
Gold Market Outlook: இந்த 2025 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியது. மேலும் மூதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தையும் அளித்தது. இந்த நிலையில் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்த 2025 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிக வளர்ச்சி மற்றும் லாபம் கொடுத்த முதலீடுகளில் தங்கம் (Gold) மிக முன்னிலை வகித்தது. பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் சொத்துகள் என்று அனைத்து முதலீடுகளையும் (Investment) விட தங்கம் அதிக வருமானம் கொடுத்தது. இந்தியாவிலும் தங்க விலை வரலாற்றிலேயே மிக உயர்ந்த நிலையை எட்டியது. கடந்த 2025 அக்டோபர் 17 அன்று 24 கேரட் அதாவது 999 சுத்த தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1,30,874 எனப் பதிவானது. இது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உச்சகட்ட விலையாக கூறப்படுகிறது. இதனால் தங்கத்தை அனைவரும் லாபகரமான முதலீடாக மக்கள் பார்த்தனர்.
தங்கத்தின் மதிப்பு உயர்ந்ததற்கான காரணம்
2025 ஆம் ஆண்டில், பல காரணங்களால் தங்கத்திற்கு சரியான சூழல் உருவாக, தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தன. சீனா, ரஷ்யா, துருக்கி, இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்க டாலரின் சார்பை குறைக்க, தங்கத்தை பெருமளவில் வாங்கின. இது தங்கத்திற்கான பெரும் தேவை உருவாக்கியது. ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் குறைந்ததால், உண்மையான லாப விகிதம் குறைந்தது. இதனால் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்பட்டது. 2025 அக்டோபர் மாதத்திற்குள் 670 டன் தங்கத்தை உலக முதலீட்டாளர்கள் சந்தை வழியாக பெரிய அளவில் வாங்கினார்கள். தங்கத்தின் உண்மையான லாப விகிதம் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : EPFO 3.0: ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி… இந்த ஆண்டின் மிக முக்கிய அறிவிப்பு
போர் சூழல், கொள்கை உறுதியின்மை, மற்றும் அமெரிக்காவின் பொருளாதார சூழல் இவை அனைத்தும் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக முன்னிலைப்படுத்தின. மேலும் இந்திய ரூபாயில் பலவீனமாக இருந்ததும், திருமண சீசன்கள் போன்றவையும் தங்கத்தின் விலையை மிகவும் அதிகரித்தன. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவின் படி, கடந்த 10 வருடங்களில் இந்திய தனது தங்க சேமிப்பை 58 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க : Year Ender 2025: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 – அதிரடியாக குறைந்த கார், பைக் விலை
2026ல் தங்கத்தின் மதிப்பு உயருமா?
தங்கமானது ஆண்டுக்கு 67 சதவிகிதம் லாபம் கொடுத்தாலும், தங்கம் ஓவர்வேல்யூவேசன் நிலையிலேயே இருக்கும் என்கிறார்கள். 2026 ஆம் ஆண்டு தொடக்க காலத்தில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் எனவும் சென்ட்ரல் பேங்க் வாங்குவதை பொருத்தும், அரசியல் பதட்டம் உள்ளிட்ட காரணங்களாலும் வளர்ச்சி தொடரும் என்கிறார்கள். ஆனால், பங்குகளுடன் ஒப்பிடும்போது கவனமாக இருக்கவேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். வரலாற்றில் ஓராண்டில் தங்கத்தின் விலை அதிக அளவு உயர்ந்தால், அதற்கு அடுத்த ஆண்டு பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. இதனால் முதலீட்டாளர்கள் 10 முதல் 15% தங்கத்திற்கு ஒதுக்கி, கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் மூலம் சிப் ஆக முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.