AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Budget 2026 : இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு கொள்கை பாலமாக உருவாக்கப்பட்ட பட்ஜெட் – என்ன சிறப்புகள்?

Budget 2026 Highlights : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2026, இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய தேவைகளுக்கும் எதிர்கால வளர்ச்சி இலக்குகளுக்கும் இடையே ஒரு வலுவான கொள்கை பாலமாக அமைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Budget 2026 : இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு கொள்கை பாலமாக உருவாக்கப்பட்ட பட்ஜெட் – என்ன சிறப்புகள்?
Budget 2026 Highlights
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Feb 2026 17:17 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2026, இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய தேவைகளுக்கும் எதிர்கால வளர்ச்சி இலக்குகளுக்கும் இடையே ஒரு வலுவான கொள்கை பாலமாக அமைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் உருவான வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து கடைபிடிப்பதற்காக, இந்த பட்ஜெட்டில் சுமார் 60 முதல் 70 சதவீதம் வரை முந்தைய ஆண்டுகளின் கொள்கைகள் தொடர்ச்சியாக வலுப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை கருத்தில் கொண்டு சில புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நிதி ஒழுங்கு மற்றும் நிலைத்தன்மை இந்த பட்ஜெட்டின் முக்கிய தூண்களாக அமைந்துள்ளன. 2026–27 நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை ஜிடிபியின் 4.3 சதவீதமாக கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 2031-க்குள் கடன் விகிதத்தை 50 சதவீதமாகக் குறைக்கும் நீண்டகால திட்டமும் தொடர்கிறது. வரி அமைப்பில் பெரும் மாற்றங்கள் செய்யப்படாமல், விதிமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில் வருமான வர சட்டம் 2025 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி செலுத்துபவர்களுக்கு குழப்பம் குறையும் என்றும், நிர்வாக சிக்கல்கள் தளர்த்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.12.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய 20 புதிய நீர்வழிகள், ஏழு அதிவேக ரயில் வழித்தடங்கள் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் வளர்ச்சி வேகப்படுத்தப்பட உள்ளது. இது தொழில் துறைக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முக்கிய ஆதாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்றும் நோக்குடன் செமி கண்டக்டர் மிஷன் 2.0 விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் உற்பத்தித் திட்டத்திற்கு ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு, டீப் டெக், மற்றும் உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளில் இந்தியாவின் பங்கு அதிகரிக்க இது உதவும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. சிறு குறு தொழில்துறைக்காக 200 பழைய தொழில் கிளஸ்டர்கள் மீண்டும் புதுப்பிக்கப்படுவதுடன் , இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் செயல்படும் சிறு தொழில்களுக்கு கார்பரேட் மித்ராஸ் மூலம் சட்ட மற்றும் நிர்வாக ஆதரவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனிம வளங்களில் இந்தியாவுக்கு தன்னிறைவு

எதிர்காலத்தை நோக்கிய புதிய முயற்சிகளாக, ரேர் எர்த் காரிடார்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம், முக்கிய கனிம வளங்களில் இந்தியாவின் தன்னிறைவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மேலும், ரூ.10,000 கோடி மதிப்பில் பயோ பார்மா சக்தி அறிமுகம் செய்யப்பட்டு, உயிரியல் மருந்து ஆராய்ச்சியில் இந்தியாவை உலக அளவில் முன்னணி நாடாக மாற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பொதுமக்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு உடனடி நிவாரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு கல்வி, மருத்துவச் செலவுகள் மற்றும் சுற்றுலா தொடர்பான TCS 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்க குடும்பங்களின் பணப்புழக்கத்தை மேம்படுத்தும் என கருதப்படுகிறது. மேலும் புற்றுநோய் மருந்து உட்பட 17 அத்தியாவசிய மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், தனிப்பட்ட இறக்குமதி பொருட்களுக்கான சுங்கவரி 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

 

Follow Us