10 நாட்களில் 3 முறை உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. அத்தியாவசிய பொருட்களி விலை உயரும் அச்சம்!
Petrol and Diesel Price Hiked | மேற்கு ஆசியா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை அடைந்து வருகிறது. அந்த வகையில், இன்று மூன்றாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது.
மேற்கு ஆசியா போர் (West Asia War) காரணமாக கச்சா எண்ணெய் (Crude Oil) கடும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு (Petrol and Diesel) கச்சா எண்ணெய் மூலதனமாக விளங்கும் நிலையில், உலக நாடுகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, வெறும் 10 நாட்களில் மட்டும் இந்தியாவில் மூன்று முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினசரி பயன்படுத்தும் பொருட்களின் விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
10 நாட்களில் மூன்று முறை உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை
பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக மேற்கு ஆசியா போர் உருவானது. அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வந்த நிலையில், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக உலக நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் சிக்கி தவித்தன. அதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை உயர்வு அடைய தொடங்கியது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு 69 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பேரல் கச்சா எண்ணெய் தற்போது ஒரு பேரல் 103 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : சம்பளம் வந்ததும் பணம் காலியாகிவிடுகிறதா?.. இனி உங்கள் நிதி மேலாண்மையை சாட்ஜிபிடி பார்த்துக்கொள்ளும்!
10 நாட்களில் மூன்று முறை உயர்ந்த கச்சா எண்ணெய்
ஈரான் போருக்கு மத்தியில் முதல் முறையாக மே 15, 2026 அன்று இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.14 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.3.11 உயர்வை சந்தித்தது. இதனை தொடர்ந்து மே 19, 2026 அன்று இரண்டாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்தித்தது. அதாவது பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.105.31-க்கும், டீசல் லிட்டருக்கு 91 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.96.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : ஜூன் மாதத்தில் ஆர்பிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. வீடு, வாகன கடன் வட்டி உயரும்?
பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.