Khawaja Asif: எதுக்கும் தயாராக இருங்க.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், எதிர்கால ராணுவ மோதல் குறித்து இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, இந்திய ராணுவ தளபதி பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தக் கோரி எச்சரித்திருந்தார். 'ஆபரேஷன் சிந்தூர் 1.0' போன்ற நிதானம் மீண்டும் இருக்காது என்றும் கூறினார்.

கவாஜா ஆசிஃப்
பாகிஸ்தான், அக்டோபர் 6: எதிர்காலத்தில் எந்தவொரு இராணுவ மோதலுக்கும் இந்தியா தயாராக இருக்குமாறு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா கடும் தாக்குதல் நடத்தியது. இரு நாட்டுக்கும் இடையே போரினால் கடும் பதற்றம் நிலவியது. இப்படியான நிலையில் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில் அவ்வப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ராணுவத் தளபதி உபேந்திர திவேதியும் பாகிஸ்தானை சமீபத்தில் எச்சரித்தனர். இதில் ராணுவ தளபதி திவேதி பேசும்போது, உலக வரைபடத்தில் பாகிஸ்தான் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், தனது மண்ணில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். பயங்கரவாதத்திற்கு தொடர்ந்து நிதியுதவி அளித்தால், உலக வரைபடத்திலிருந்து இஸ்லாமாபாத் அழிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை.. தன்னிறைவு இந்தியா திட்டம்.. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை!
அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இராணுவ மோதல் ஏற்பட்டால், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா காட்டிய நிதானம் மீண்டும் செய்யப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.இந்தியா, ஒரு நாடாக, இந்த முறை முழுமையாக தயாராக உள்ளது. இந்த முறை, ஆபரேஷன் சிந்தூர் 1.0 இன் போது காட்டிய நிதானத்தை அது காட்டாது. இந்த முறை நாம் ஒரு படி முன்னேறி, உலக வரைபடத்தில் நிலைத்திருக்க விரும்புகிறதா இல்லையா என்று பாகிஸ்தான் சிந்திக்க வைக்கும் வகையில் செயல்படுவோம் எனவும் ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறியிருந்தார்.
பாகிஸ்தான் கொடுத்த எச்சரிக்கை
இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். 2025, அக்டோபர் 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அவர், “எதிர்காலத்தில் எந்தவொரு இராணுவ மோதலுக்கும் எதிராக இந்தியாவை எச்சரித்தார். மேலும் இந்தியா அதன் போர் விமானங்களின் இடிபாடுகளுக்குள் புதைக்கப்படும் எனவும் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய ராணுவம் தாக்குதல்.. பயங்கரவாதி மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி
இந்திய இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களின் சமீபத்திய சில அறிக்கைகள், பகல்ஹாம் தாக்குதலுக்குப் பின் மே மாதம் நடந்த மோதல்களில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஏற்பட்ட அழுத்தத்தின் விளைவாக இழந்த நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்கான தோல்வியடைந்த முயற்சி என்று கவாஜா ஆசிப் குறிப்பிட்டுள்ளார்.