இந்தியர்களை தொடர்புகொள்ளும் பாகிஸ்தான் உளவாளிகள் – பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
Defence Ministry Issues Alert : போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே மெல்ல அமைதி திரும்பி வரும் நிலையில் பாகிஸ்தான் உளவாளிகள் இந்தியர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் (Pakistan) இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இரு நாடுகளுக்கு இடையே மெல்ல அமைதி திரும்பி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் உளவாளிகள் தொலைபேசி மூலம் இந்தியர்களை தொடர்பு கொள்ளலாம் என்று பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. இதுபோன்ற அழைப்புகள் பாதுகாப்பு அதிகாரிகள் என்ற பெயரில் வரக்கூடும் என்றும் இந்த அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. இந்தியாவிற்கும் (India) பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டம் நீடித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. பல்வேறு தேசிய ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன
பாகிஸ்தான் உளவுத்துறை மூலம் வரும் அழைப்பு
ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தகவல்களை சேகரிக்க பாகிஸ்தான் உளவாளிகள் இந்தியர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்ற எச்சரிக்கை உள்ளது. குறிப்பாக +91 7340921702 என்ற எண்ணிலிருந்து அழைப்புகள் செய்யப்படும். வாட்ஸ்அப்பிலும் மெசேஜ் வரலாம். அது இந்திய எண் என்பதால், கூடுதல் கவனம் தேவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய பாதுகாப்பு அதிகாரி போல் நடிக்கும் ஒருவரால் இந்த அழைப்பு செய்யப்படும். பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களைத் தொடர்புகொள்வதன் மூலம் தகவல்களைச் சேகரித்து தற்போதைய நிலைமையைப் புரிந்துகொள்ள பாகிஸ்தான் உளவுத்துறை மேற்கொண்ட முயற்சி இது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டு மக்களுடன் பேசிய பிரதமர் மோடி
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றினார். மேலும் ராணுவத்தின் துணிச்சல் அசாதாரணமானது என்றும், ஆபரேஷன் சிந்தூர் நாட்டின் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் பேசினார். சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல. அது நாட்டின் உணர்வு என்றும் அவர் கூறினார்.
பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் தப்பிக்க மாட்டார்கள்
மேலும் பயங்கரவாத பயிற்சி மையத்தை நாங்கள் அழிக்க முடிந்தது. நாங்கள் இப்படி ஒரு முடிவை எடுப்போம் என்று அவர்கள் கனவிலும் நினைத்ததில்லை. நாம் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றோம். பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நாம் அழித்தோம். இங்கு போர் நிறுத்தத்தைக் கோரியதே பாகிஸ்தான்தான், ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. அணு ஆயுத அச்சுறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாது. பயங்கரவாதிகளும், பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களும் தப்பிக்க மாட்டார்கள். மேலும், இந்தியா தற்போதைக்கு இராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அவர் விளக்கினார்.
உலகில் எங்கெல்லாம் பெரிய தாக்குதல்கள் நடந்திருக்கிறதோ, அவை அனைத்தும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களுடன் தொடர்புடையவை. பஹவல்பூரும் முரிட்கேவும் உலகளாவிய பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்து வருகின்றன. இந்தியப் படைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மற்றும் அவர்களின் பயிற்சி மையங்களைத் துல்லியமாகத் தாக்கின. இந்தியா இவ்வளவு பெரிய முடிவை எடுக்க முடியும் என்று பயங்கரவாதிகள் கனவிலும் நினைத்ததில்லை,என்று பேசினார்