AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஈரான் போர் எதிரொலி: உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை.. ஆட்டம் காணும் அமெரிக்கப் பங்குச்சந்தை..

Oil jumps to highest price: இதற்கிடையில், ஈரான் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும், அந்த நாடு "நிபந்தனையின்றி சரணடைய" வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது போர் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பதையே காட்டுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஈரான் போர் எதிரொலி: உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை.. ஆட்டம் காணும் அமெரிக்கப் பங்குச்சந்தை..
உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Mar 2026 13:14 PM IST

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் அமெரிக்காவின் பலவீனமான வேலைவாய்ப்பு தரவுகள் காரணமாக, உலகளாவிய நிதிச் சந்தைகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கச்சா எண்ணெய் விலை 2023ம் ஆண்டிற்குப் பிறகு அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது, இது உலகப் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில தினங்களாகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8.5 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 92.69 டாலராக நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் இது 94 டாலரைக் கடந்து சாதனை படைத்தது. அதேபோல், அமெரிக்க கச்சா எண்ணெய் விலையும் 12.2 சதவீதம் உயர்ந்து 90.90 டாலராக வர்த்தகமானது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கு முக்கிய இடமாகத் திகழும் மத்திய கிழக்குப் பகுதிகளில் போர் விரிவடைந்து வருவதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

இதையும் படிக்க: அமெரிக்கப் படைகளைத் தாக்க ஈரானுக்கு கைகொடுக்கும் ரஷ்யா.. கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்..

வால் ஸ்ட்ரீட் சரிவு:

எண்ணெய் விலை உயர்வு ஒருபுறம் இருக்க, அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சந்தை குறித்த ஏமாற்றமளிக்கும் தகவல்கள் முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. கடந்த மாதத்தில் அமெரிக்க நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை விட, அதிகமான வேலைகளைக் குறைத்துள்ளன. இதன் விளைவாக S&P 500 குறியீடு 1.3 சதவீதம் சரிந்தது. டவ் ஜோன்ஸ் (Dow Jones) ஒரு கட்டத்தில் 945 புள்ளிகள் வரை சரிந்து, இறுதியில் 453 புள்ளிகள் வீழ்ச்சியுடன் முடிவடைந்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் கொண்ட நாஸ்டாக் (Nasdaq) 1.6 சதவீதம் சரிவைக் கண்டது.

தேக்கவீக்கம் அச்சம்:

பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் அதே வேளையில், பணவீக்கம் (விலைவாசி) உயரும் ‘தேக்கவீக்கம்’ (Stagflation) நிலை ஏற்படுமோ என நிபுணர்கள் அஞ்சுகின்றனர். “எதிர்மறையான வேலைவாய்ப்பு தரவுகளுடன் எண்ணெய் விலை உயர்வும் இணைந்திருப்பது வர்த்தகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது,” என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஹார்முஸ் நீரிணையும் உலக விநியோகமும்:

உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகவே நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் போர் பதற்றம் நீடிப்பதால், கப்பல்களுக்கான காப்பீடு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டினால் உலகப் பொருளாதாரம் மீள முடியாத நெருக்கடியைச் சந்திக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: மேற்கு ஆசியா போர்.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமா? நிலவரம் என்ன?

அமெரிக்காவின் கடும் நிலைப்பாடு:

இதற்கிடையில், ஈரான் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும், அந்த நாடு “நிபந்தனையற்ற சரணடைய” வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது போர் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பதையே காட்டுகிறது. பங்குச்சந்தை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றால் சிறிய நிறுவனங்கள் மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.

Follow Us