AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ.. பிரான்ஸ், ஸ்பெயினில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

Europe Wildfire Rescue Operations: காட்டுத்தீயால் உருவாகும் புகையில் உள்ள நுண்துகள்கள், கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட மாசுக்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வரை பரவி காற்றின் தரத்தை பாதிக்கின்றன. மேலும், விவசாய நிலங்கள், தோட்டங்கள் மற்றும் கால்நடை வாழ்வாதாரமும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ.. பிரான்ஸ், ஸ்பெயினில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Jul 2026 10:04 AM IST

ஜூலை 30, 2026: ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த தீவிபத்தால் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளதால், சுற்றுச்சூழல் மற்றும் மனித வாழ்வில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

20 ஆண்டுகளில் இல்லாத அளவு காட்டுத்தீ:

வரலாறு காணாத அளவுக்கு நீடித்த வெப்ப அலை காரணமாக தெற்கு ஐரோப்பா முழுவதும் தாவரங்கள் மற்றும் வனப்பகுதிகள் வறண்டு போனதே இந்த காட்டுத்தீ வேகமாக பரவ முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது இயற்கை பேரிடர் மட்டுமல்ல, காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவாகும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) ஐரோப்பிய ஆய்வு மைய ஆராய்ச்சியாளர் சைதன்ய தேஷ்பாண்டே கூறுகையில், “நீடித்த வெப்ப அலை காரணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் தாவரங்கள் முற்றிலும் வறண்டு, தீ எளிதில் பரவும் சூழல் உருவாகியுள்ளது. தீப்பற்றியதற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை. இருப்பினும் சில தீவிபத்துகள் இயற்கையாக ஏற்பட்டவை அல்ல என்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது” என்றார்.

தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு:

மேலும், சில பகுதிகளில் காட்டுத்தீயால் உருவாகும் ‘பைரோகியூமுலோநிம்பஸ்’ எனப்படும் தீ மேகங்கள் தனித்துவமான வானிலை அமைப்பை உருவாக்குவதால், தீயணைப்பு பணிகள் மிகவும் சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் விளக்கினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்னிகஸ் செயற்கைக்கோள் கண்காணிப்பு திட்டம், அவசரகால மீட்புத் திட்டம் மூலம் தீ பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, உறுப்பு நாடுகளுக்கு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: உருகும் பனி.. அபாயம் தரும் 56,000 புதிய ஏரிகள்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த Our Kids Climate அமைப்பின் இணை இயக்குநர் மாயா மெய்லர் கூறுகையில், “இந்த காட்டுத்தீ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள், விவசாய நிலங்கள் அழிந்துள்ளதுடன், காற்றில் கலக்கும் நச்சுத் துகள்கள் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாச நோயாளிகளின் உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. புதைபடிவ எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடே காலநிலை மாற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளது. எனவே சூரிய மற்றும் காற்றாலை உள்ளிட்ட தூய்மையான புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு உலக நாடுகள் விரைவாக மாற வேண்டும்” என்றார்.

காட்டுத்தீயால் ஏற்படும் பாதிப்புகள்:

காட்டுத்தீயால் உருவாகும் புகையில் உள்ள நுண்துகள்கள், கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட மாசுக்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வரை பரவி காற்றின் தரத்தை பாதிக்கின்றன. மேலும், விவசாய நிலங்கள், தோட்டங்கள் மற்றும் கால்நடை வாழ்வாதாரமும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களைத் தடுக்க, வன மேலாண்மையை மேம்படுத்துதல், கட்டுப்படுத்தப்பட்ட தீவைத்தல், உலர்ந்த புதர்களை அகற்றுதல், நாடுகளுக்கு இடையேயான தீயணைப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரித்தல் ஆகிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Follow Us