அமெரிக்கப் படைகளைத் தாக்க ஈரானுக்கு கைகொடுக்கும் ரஷ்யா.. கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்..
Russia Backing Iran In War: இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் "நிபந்தனையற்ற சரணடைதல்" (Unconditional Surrender) ஒன்றே வழி என்று உறுதியாகக் கூறியுள்ளார். சரணடைந்தால் மட்டுமே ஈரானை பொருளாதார ரீதியாக மேம்படுத்த அமெரிக்கா உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போரில் ரஷ்யா மறைமுகமாக பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரானுக்கு ரஷ்யா உளவுத்துறை தகவல்களை வழங்கி வருவதாக வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு ரஷ்யா வழங்கும் ஆதரவின் அளவு முழுமையாகத் தெரியவில்லை, ஆனால் கடந்த வாரம் தெஹ்ரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதில் இருந்து, அமெரிக்கப் படைகளைக் கண்டறியும் ஈரானிய இராணுவத்தின் சொந்தத் திறன் குறைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மேற்கு ஆசியா போர்.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமா? நிலவரம் என்ன?
பலமாக நிற்கும் ரஷ்யா:
கார்னகி எண்டோமென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் அமைப்பின் நிபுணர் தாரா மசிகாட் கூற்றுப்படி, ஈரானிடம் போதுமான ராணுவ செயற்கைக்கோள்கள் இல்லாத சூழலில், ரஷ்யாவின் மேம்பட்ட விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் திறன் ஈரானுக்குப் பெரும் பலமாக உள்ளது. ஈரான் தனது முன்கூட்டியே எச்சரிக்கும் ரேடார்களைப் பயன்படுத்தி, மிகத் துல்லியமான தாக்குதல்களை அமெரிக்கக் கட்டுப்பாட்டு மையங்கள் மீது நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துல்லியமாக தாக்கும் ஈரான்:
இந்த மோதலின் தீவிரம் குறையவில்லை என்பதற்கு, குவைத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல் ஒரு சான்றாகும். இதில் 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர். ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டிச் சென்று அமெரிக்கத் தளங்களைத் தாக்குவது, ஈரானின் தாக்குதல் திறன் மேம்பட்டுள்ளதைக் காட்டுகிறது. வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, ஈரானின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் கடற்படை பெரும் சேதத்தைச் சந்தித்து வருகின்றன, இருப்பினும் ஈரானின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
சர்வதேச அரசியல், பொருளாதார விளைவுகள்:
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத் கூறும்போது, ரஷ்யாவும் சீனாவும் இந்த போரில் ஒரு காரணியாக இல்லை என்று நிராகரித்த போதிலும், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த மோதலால் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கான தேவை உலக சந்தையில் அதிகரித்துள்ளது. உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட ரஷ்யப் பொருளாதாரம், இந்த மோதலின் மூலம் ஒரு எதிர்பாராத ஊக்கத்தைப் பெற்றுள்ளது.
ட்ரம்ப்பின் நிலைப்பாடு:
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் “நிபந்தனையற்ற சரணடைதல்” (Unconditional Surrender) ஒன்றே வழி என்று உறுதியாகக் கூறியுள்ளார். சரணடைந்தால் மட்டுமே ஈரானை பொருளாதார ரீதியாக மேம்படுத்த அமெரிக்கா உதவும் என்றும், மற்றபடி வேறு எந்த ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்றும் அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : உச்சகட்ட பதற்றம்.. ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்.. உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஈரானின் பதில் தாக்குதல்கள் மற்றும் ரஷ்யாவின் மறைமுக ஆதரவு ஆகியவை இந்தப் போரை ஒரு நீண்டகாலப் பிரச்சினையாக மாற்றியுள்ளன. ட்ரம்ப்பின் சரணடைதல் கோரிக்கையும், தொடர்ந்து அதிகரிக்கும் அமெரிக்கத் தாக்குதல்களும் மத்திய கிழக்கின் எதிர்காலத்தை எந்தத் திசையில் கொண்டு செல்லப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.