ஹார்முஸ் நீரிணையை கடக்க ரூ.18 கோடி கட்டணம்.. ‘சுங்க வரி’ விதித்து ஈரான் அதிரடி!!..
Iran - Isreal War conflict: ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே 6% வரை அதிகரித்துள்ளது. சுமார் 700-க்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணைக்கு அருகே காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. போர்ச் சூழலில், கப்பல் போக்குவரத்து 86% வரை குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Iran – Isreal War: உலக வர்த்தகத்தின் மிக முக்கியமான நீர்வழிகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரானின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில், அந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுமார் 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹18.8 கோடி) வரை ஈரான் கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இது குறித்த மேலும் விரிவான தகவல்களை இக்கட்டுரையில் காணலாம்.
இதையும் படிக்க: “பதிலடிக்கு பதிலடி!”.. இஸ்ரேலின் அணுசக்தி மையத்தை குறிவைத்த ஈரான்.. 100க்கும் மேற்பட்டோர் காயம்..
ரூ.18.8 கோடி கட்டணம் ஏன்?
ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு கமிட்டி உறுப்பினரான அலாவுதீன் போருஜெர்டி, அரசு ஊடகமான IRIB-க்கு அளித்த பேட்டியில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். “போருக்கு ஒரு விலை உண்டு” என்று குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்த இனி பெரும் தொகையைச் சுங்கக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், “ஹார்முஸ் நீரிணை திறந்தே உள்ளது, ஆனால் அது எங்கள் எதிரிகளுக்கு மூடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.




நட்புறவு நாடுகளுக்கு மட்டும் அனுமதி:
இதன்படி, இஸ்ரேல் அல்லது அமெரிக்காவுடன் தொடர்பில்லாத, ஈரானுடன் நட்புறவு கொண்ட ஆசிய நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சமீபத்தில், ஈரானிய கடற்படையானது இந்தியாவின் இரண்டு எல்பிஜி (LPG) டேங்கர் கப்பல்களை முறையாக ஆய்வு செய்த பிறகு, அந்த நீரிணை வழியாகப் பாதுகாப்பாக வழிநடத்திச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் சுமார் 20% ஹார்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு:
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே 6% வரை அதிகரித்துள்ளது. சுமார் 700-க்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணைக்கு அருகே காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி 28 முதல் தொடங்கிய இந்தப் போர்ச் சூழலில், கப்பல் போக்குவரத்து 86% வரை குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. போர் அபாயம் மற்றும் ஈரானின் இந்தத் திடீர் கட்டணம் காரணமாகக் கப்பல்களுக்கான காப்பீட்டுத் தொகையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: “4,000 கி.மீ தூரம்.. இந்திய பெருங்கடலில் யுத்தம்.. உலகையே அதிரவைத்த ஈரானின் ‘மெகா’ ஏவுகணைத் தாக்குதல் முயற்சி..
இந்தியாவின் நிலைப்பாடு:
இந்த விவகாரத்தில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளார். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியாக இந்தப் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஈரானின் இந்த ‘தேர்ந்தெடுக்கப்பட்ட முற்றுகை’ மற்றும் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் முறை சர்வதேச வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் இது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.