இனி YouTube-ல் பணம் சம்பாதிப்பது கடினம்.. நெறிமுறைகளை கடுமையாக்கிய யூடியூப்!
YouTube's New Monetization Rules | ஏராளமான பொதுமக்கள் யூடியூபில் வீடியோ பதிவிட்டு பணம் சம்பாதிக்கின்றனர். இந்த நிலையில், யூடியூபில் பதிவிடப்படும் வீடியோக்களுக்கு பணம் வழங்குவதற்கான நெறிமுறைகளை அந்த நிறுவனம் கடுமையாக மாற்றியுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ஜூலை 15, 2025 முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம் (Information Technology) மிகவும் சுலபமாக மாறிவிட்ட அதே வேலையில் போலி தகவல்களும் அதிகமாக பரவ தொடங்கிவிட்டன. ஸ்மார்ட்போனின் உதவியுடன் யார் வேண்டுமானாலும் இணையதளத்தை பயன்படுத்தலாம் என்ற நிலை உள்ளதால், பலரும் பல விதமான பொய் தகவல்கள் மற்றும் விவரங்களை இணையத்தில் பதிவிடுகின்றனர். இவ்வாறு வாட்ஸ்அப் (WhatsApp), ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளிட்ட அனைத்து செயலிகளிலும் போலி தகவல்கள், அறிவிப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இவற்றை தடுப்பதற்காக யூடியூப் ஒரு புதிய முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது. அதாவது, தனது விதிகளில் யூடியூப் மாற்றம் செய்துள்ளது.
விதிகளில் மாற்றம் செய்த யூடியூப்
தகவல் தொழில்நுட்பம் மட்டுமன்றி செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதால் ஏராளமான போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவு வைரலாகி வருகின்றன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்படும் ஏராளமான போலி வீடியோக்களும் இணையத்தில் உலா வருகின்றன. இது நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்புவது மட்டுமன்றி, மோசடிகளையும், தவறான தகவல்களை பரப்புவததிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அம்சங்களால் தயாரிக்கப்படும் போலி வீடியோக்களை கட்டுப்படுத்தி பயனர்களுக்கு உறுதி செய்யப்பட்ட மற்றும் உண்மையாக தகவல்களை வழங்கும் வகையில் Monetization விதிகளை யூடியூப் கடுமையாக்கியுள்ளது.
இதையும் படிங்க : Google Meet : தமிழில் பேசினால் ஆங்கிலத்தில் கேட்கும்.. கூகுள் மீட்டில் வந்த அசத்தல் அம்சம்!




ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்
- தங்களாக முயற்சி செய்து தயாரித்து வெளியிடும் வீடியோக்களுக்கு மட்டுமே வருமானம் வழங்கப்படும்.
- சுயமாக வீடியோக்களை தயாரித்து வெளியிடும் நபர்களது வீடியோக்கள் மட்டுமே விளம்பரம் செய்யப்படும்.
- மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களுக்கு பணம் வழங்கப்படாது.
- ஒன்றை போலவே இருக்கும் மற்றொரு வீடியோவுக்கு பணம் வழங்கப்படாது.
- தரம் குறைந்த வீடியோக்களுக்கு பணம் வழங்கப்படாது.
மேற்குறிப்பிட்ட இந்த சிக்கல்களை கொண்ட வீடியோக்களுக்கு இனி பணம் வழங்கப்படாது என யூடியூப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் அனைத்து ஜூலைம் 15, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது.
இனி இது மட்டும் போதாது
அதாவது யூடியூபில் வருமானம் பெற வேண்டும் என்றால் 1,000 சந்தாதாரர்கள், கடந்த 12 மாதங்களில் 4,000 பார்வைகள், 90 நாட்களில் 10 மில்லியன் குறு வீடியோ பார்வைகள் ஆகியவை மட்டுமே இனி யூடியூபில் பணம் சம்பாதிக்க கை கொடுக்காது. இதை தவிர சுயமாக உருவாக்கப்படும் வீடியோக்கள், தனித்துவம் வாய்ந்த வீடியோக்கள், இதுவரை யாரும் முயற்சி செய்யாத புதிய வகை வீடியோக்களுக்கு மட்டுமே இனி பணம் வழங்க யூடியூப் முடிவு செய்துள்ளது. இது யூடியூபில் வீடியோ பதிவிட்டு பணம் சம்பாதித்து வந்த யூடியூபர்களுக்கு கடும் நெருக்கடியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.