வாட்ஸ்அப்பில் உங்கள் வேலைகளை எளிதாக்கும் 5 அம்சங்கள் – எப்படி பயன்படுத்துவது?
WhatsApp Tips and Tricks : இன்று வாட்ஸ்அப் ஒரு தகவல் தொடர்பு செயலி மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பகுதியாக மாறியிருக்கிறது. நம் வேலைகளை எளிதாக்கும் வகையிலும் நம் அனுபவத்தை மேம்படுத்தும் சில அம்சங்களை வாட்ஸ்அப் பயனர்களுக்கு வழங்கியிருக்கிறது. அதில் முக்கியமான 5 அம்சங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இன்று வாட்ஸ்அப் (WhatsApp) ஒரு மேசேஜிங் செயலி மட்டுமல்ல, நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகவே மாறிவிட்டது. வேலை, கல்வி சார்ந்து வாட்ஸ்அப்பை பயன்படுத்துபவர்கள் அதிகரித்திருக்கின்றனர். நீங்கள் யாருக்காவது போட்டோ, வீடியோக்களை (Video) அனுப்ப விரும்பினாலும், பணத்தை மாற்ற விரும்பினாலும் அல்லது ஒரு டாக்குமென்ட்டை பகிர விரும்பினாலும், வாட்ஸ்அப் மூலம் நிமிடங்களில் முடிந்துவிடும். இது தவிர, வாட்ஸ்அப்பில் நம் நேரத்தை மிச்சப்படுத்தவும், வேலையை எளிதாக்கவும் உதவும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. அதுகுறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கட்டுரையில் நம் வேலையை எளிதாக்கும் வாட்ஸ்அப்பின் 5 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
அனுப்பிய மெசேஜை எடிட் செய்யலாம்
நீங்கள் தற்செயலாக ஏதாவது தவறாக மெசேஜ் டைப் செய்து யாருக்காவது அனுப்பியிருந்தால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜை அனுப்பிய பிறகும், அதை 15 நிமிடங்களுக்குள் திருத்தலாம். அனுப்பிய மெசேஜை லாங் பிரஸ் செய்யவும். ஸ்கிரீனில் தெரியும் ஆப்சனில் எடிட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மெசேஜை திருத்திய பிறகு சேவ் கொடுக்கலாம்.
வாய்ஸ் நோட் அனுப்ப புது வசதி
பொதுவாக ஒருமுறை வாய்ஸ் நோட் அனுப்பினால் அதனை திருத்த முடியாது. இந்த நிலையில் வாய்ஸ் நோட் அனுப்பும்போது ஒருமுறை சரிபார்த்து அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் வழங்குகிறது. இதற்கு மைக் ஐகானை ஸ்லைட் செய்து, வாய்ஸ் நோட் பதிவு செய்யவும், பின் அனைத்தும் சரியாக இருந்தால் அனுப்பலாம்.




வாட்ஸ் அப் மூலமாகவே பணம் அனுப்பலாம்
இப்போது நீங்கள் வாட்ஸ்அப்பில் யுபிஐ மூலம் சில நிமிடங்களில் பணத்தை அனுப்பலாம். அதே போல சில நிமிடங்களில் பெறலாம். வாட்ஸ்அப் சாட் பகுதியில் ₹ ஐகானை அழுத்தவும். இதற்குப் பிறகு தொகையை உள்ளிட்டு அனுப்பவும். இதன் மூலம் பணம் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
முக்கியமான மெசேஜை பின் பண்ணலாம்
ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குழுவின் மெசேஜ்களை எப்போதும் பார்க்க விருப்பினால், அதைப் பின் செய்யும் வாய்ப்பை வாட்ஸ்அப் வழங்குகிறது. இதற்கு பின் செய்ய வேண்டிய மெசேஜை லாங் பிரஸ் செய்து, பின் ஆப்சனை தேர்ந்தெடுக்கவும், அந்த மேசேஜ் எப்போதும் மேலே தெரியும்.
நொடியில் மறையும் மெசேஜ்
இப்போது யாரிடம் வேண்டுமானாலும் கவலைப்படாமல் சாட் செய்யலாம், காரணம் அங்குள்ள மெசேஜ்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு தானாகவே மறைந்துவிடும். இதற்கு, முதலில் வாட்ஸ்அப்பில் சாட் பகுதியை ஓபன் செய்யவும். அங்குள்ள புரொஃபைலை தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகு, Disappearing Messages என்பதை தேர்வு செய்யவும். இங்கே நேர அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம், குறிப்பாக 24 மணிநேரம், 7 நாட்கள் மற்றும் 90 நாட்கள் என எதையும் தேர்ந்தெடுக்கலாம்.