சாது மிரண்டால்… இல்லை, ‘ஏஐ’ மிரண்டால் சாமானிய ஊழியரின் கதி என்ன?!
Artificial Intelligence Personality: ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ ஆய்வின்படி, நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளின் எதிர்மறை மற்றும் முரட்டுத்தனமான குணாதிசயங்கள் ஊழியர்களைக் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் ஏஐ தொழில்நுட்பத்தை வடிவமைக்கும்போது, பொறுப்பான குணாதிசயத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
நவீன கார்ப்பரேட் நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பெரும்பாலான அலுவலகங்களில் வெறும் தரவுகளைச் சேகரிக்கும் கருவியாக மட்டுமில்லாமல், ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு சக ஊழியராகவும், சில இடங்களில் மேலாளராகவும் ஏஐ செயல்படத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பிரபல சர்வதேச வர்த்தக இதழான ‘ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ’ (Harvard Business Review) வெளியிட்டுள்ள புதிய ஆய்வுக்கட்டுரை ஒன்று உலக அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என்ன வேலை செய்கிறது என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அது மனிதர்களுடன் எப்படிப் பழகுகிறது என்பதும் முக்கியம் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
மனித உழைப்பை பாதிக்கும் ஏஐ-யின் முரட்டுத்தனம்
குயினியாக், யேல் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் தனிப்பட்ட ‘குணாதிசயம்’ (Personality) ஊழியர்களின் மனநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சில ஏஐ சாட்பாட்டுகள் (Chatbots) மனிதர்களிடம் பேசும்போது நக்கல், பொறுமையின்மை, மற்றவர்களின் உழைப்பிற்குத் தான் சொந்தம் கொண்டாடுவது மற்றும் தவறுகளுக்கு ஊழியர்களைப் பழிசுமத்துவது போன்ற ‘டார்க் ட்ரைட்’ (Dark Triad) எனப்படும் எதிர்மறை குணங்களுடன் வடிவமைக்கப்படுகின்றன.
ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்
மார்க்கெட்டிங் பணி சார்ந்த ஒரு சோதனையில், ஊழியர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஏஐ மேலாளர்களின் கீழ் பணிபுரிய வைக்கப்பட்டனர். இதில் அன்பான, ஆதரவான முறையில் பேசிய ஏஐ அமைப்பின் கீழ் வேலை செய்தவர்களின் முடிவுகள் மிகவும் நேர்த்தியாகவும், புதுமையாகவும் இருந்தன. ஆனால், கடுமையான மற்றும் கோபமான தொனியில் பேசிய ஏஐ-யுடன் பணிபுரிந்த ஊழியர்கள், அந்த அமைப்பின் வழிகாட்டுதலைப் புறக்கணிக்கவும், அதன் விதிகளை மீறவும் முயன்றனர். மேலும், அவர்களின் இதயத் துடிப்பு மற்றும் உடலியல் தரவுகளைப் பரிசோதித்ததில், அவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிறுவன மேலாளர்களுக்கான முக்கிய எச்சரிக்கை
பொதுவாக நிறுவனங்கள் ஒரு தொழில்நுட்பத்தின் செயல்திறனையும், பயன்பாட்டு அளவையும் மட்டுமே கணக்கில் கொள்கின்றன. ஆனால், அந்தத் தொழில்நுட்பத்தின் தகவல் தொடர்பு முறை ஊழியர்களை எவ்வளவு வதைக் கிறது என்பதை அவர்கள் கவனிப்பதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், ஏஐ எப்போதும் மிகவும் ‘நல்ல பிள்ளை’ போல சாதுவாக இருக்கக் கூடாது என்றும், அது மோசமான யோசனைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு ஊழியர்களின் சுயசிந்தனையை மழுங்கடித்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, நிறுவனங்கள் தங்களின் ஏஐ தொழில்நுட்பத்தை வடிவமைக்கும்போது, அது பணிக்கு ஏற்றவாறு கண்ணியமான மற்றும் பொறுப்பான குணாதிசயத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்