முதல்வரின் பதிலுரை.. சினிமா வசனங்களின் தொகுப்பே ஆகும் – டிடிவி தினகரன்..
TTV Dinakaran On CM Vijay: "ஊழல் செய்யவும், லஞ்சம் வாங்கவும் தவெகவினருக்கு தெரியாது" என்ற முதலமைச்சரின் கருத்தை விமர்சித்த தினகரன், தவெக நிர்வாகிகள் மீது எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு, அவற்றில் தொடர்புடையவர்களை கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம்-ஒழுங்கு குறித்து பேசுவது நகைப்புக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 23, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய நிலையில், அதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த முதலமைச்சரின் பதிலுரை, ஆவேசம், நக்கல், நையாண்டி கலந்த சினிமா வசனங்களின் தொகுப்பாகவே அமைந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை என்ன ஆனது?
தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் போராடி வரும் விவசாயிகளை, எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் போராடுவதாகக் கூறுவது விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சராக பொறுப்பேற்று 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். பதவியேற்ற உடன் அறிவிக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்புப் படை தற்போது செயல்படுகிறதா என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இலவச மின்சாரம் தொடர்பான தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாமல், நிறைவேற்றியதாக கூறுவது வாக்குறுதியை மறைப்பதாகும் என்றும் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
கால அவகாசம் கேட்பது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயலாகும்:
கூட்டணி ஆட்சியை புரட்சியாக சித்தரிக்கும் முதலமைச்சர், தேர்தலுக்கு முன்பு உருவான கூட்டணியால் அல்லாமல், பின்னர் ஆதரவு அளித்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் துணையுடன் ஆட்சியை அமைத்துள்ளார் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை அரசியல் சுயநலத்திற்காக பயன்படுத்தியதே ஜனநாயகமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: முதல்வரின் தனி செயலர் நியமனத்தில் வெடித்த சர்ச்சை.. தவெக ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை.. அரசாணையில் குறிப்பிடப்பட்ட வார்த்தை!
சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், அனைத்திற்கும் கால அவகாசம் கேட்பது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயலாக தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
“ஊழல் செய்யவும், லஞ்சம் வாங்கவும் தவெகவினருக்கு தெரியாது” என்ற முதலமைச்சரின் கருத்தை விமர்சித்த தினகரன், தவெக நிர்வாகிகள் மீது எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு, அவற்றில் தொடர்புடையவர்களை கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம்-ஒழுங்கு குறித்து பேசுவது நகைப்புக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
ரோமப் பேரரசர் கலிகுலாவை நினைவுப்படுத்தும் முதல்வர்:
மேலும், தனது ஆட்சிக் காலத்தில் நெருக்கமானவர்களுக்கு பதவிகள் வழங்குவது, கட்சியினரின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தத் தவறுவது, ஜனநாயக மாண்புகளை மீறுவது போன்ற செயல்பாடுகள், ரோமப் பேரரசர் கலிகுலாவை நினைவுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் முந்தைய ஆட்சியையே காரணம் காட்டாமல், ஆக்கப்பூர்வமான நிர்வாகத்தை முன்னெடுத்து, தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசையும் முதலமைச்சர் விஜயையும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.