ஏஐ இடம் மருத்துவ ஆலோசனைகள் கேட்காதீர்கள்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. காரணம் என்ன?
AI Chatbots Are Not For Medical Advice | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் உடல்நல பிரச்னைகள் குறித்து சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஇ சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கின்றனர். ஆனால், அவ்வாறு செய்வது மிகவும் ஆபத்தான விஷயம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போதைய சூழலில் உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களை (Artificial Intelligence Chatbot) பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஹைதராபாத்தில் (Hyderabad) உள்ள மருத்துவர்கள் பொதுமக்கள் தங்களது மருத்துவ தேவைகளுக்கு செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளனர். உலக அளவில் நடைபெற்ற இரண்டு அதிர்ச்சியூட்டும் சம்பவங்களுக்கு பிறகு மருத்துவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், மருத்துவர்களின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சாட்ஜிபிடி கூறியதால் ஆண்டிபயாடிக் மருந்துகளை நிறுத்திய பெண்
30 வயது பெண் ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், அந்த பெண் ஆண்டிபயாடிக் மருந்துகளை (Antibiotic Medicines) நிறுத்தியதால் தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மாற்றி வைக்கப்பட்ட சிறுநீர்கமும் செயலிழந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அந்த பெண் சுமார் 7 ஆண்டுகள் டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். கெரடின் போதுமான அளவு இருக்கும் பட்சத்தில் ஆண்டிபயாடிக் மருந்து எடுத்துக்கொள்ள தேவையில்லை என சாட்ஜிபிடி கூறிய நிலையில், அந்த பெண் மருந்துகளை நிறுத்தியுள்ளார். இதன் காரணமாக அவர் இந்த சிறுநீரகத்தையும் இழந்துள்ளார்.
இதையும் படிங்க : AC : குளிர் காலத்தில் ஏசியை ஹீட்டராக பயன்படுத்தலாம்.. எப்படி தெரியுமா?




சாட்ஜிபிடி டயட் டிப்ஸ் – முதியவருக்கு வந்த சிக்கல்
இதேபோல நியூயார்க்கில் (New York) ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 60 வயது முதியவர் ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவரது உடலில் சோடியம் அளவு குறைந்து அவர் திடீரென உடல் எடை குறைய தொடங்கியுள்ளார். சாட்ஜிபிடியில் டயட் பிளான் பார்த்து அதன்படி உணவு உட்கொண்ட நிலையில், அவர் இந்த சிக்கலை எதிர்க்கொண்டுள்ளார். அவருக்கு சாட்ஜிபிடி முழுவதுமாக உப்பை தவிர்க்கும்படி கூறியுள்ளது. அதனை பின்பற்றி டயட்டில் இருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் இருந்து வேறு செயலிக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் மெட்டா!
சாட்ஜிபிடி மற்றும் பிற செயற்கை நுண்ணறிவு சாட்பாட்கள் உடல்நலம் குறித்த விழுப்புணர்வுக்காக மட்டுமே. அவற்றை மருத்துவ ஆலோசனைகளுக்காக அனுக கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுமக்கள் சாட்ஜிபிடி, மருத்துவர்களை விட சிறந்தது என நினைக்கின்றனர். ஆனால், மருத்துவர்களை விட சாட்ஜிபிடி சிறப்பானது அல்ல. எனவே பொதுமக்கள் இது குறித்து மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.