சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்.. பாரில் இளைஞர் கொலை.. புதுச்சேரியில் அதிர்ச்சி!
Puducherry Murder : புதுச்சேரியில் ரெஸ்டோ பாரில் ஏற்பட்ட பிரச்னையில் கல்லூரி மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். கல்லூரி மாணவர்களை வலுக்கட்டாயமாக பாரில் இருந்து வெளியேற்ற முயன்றபோது, ஏற்பட்ட தகராறில் பவன்சர், கல்லூரி மாணவரை குத்திக் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதுச்சேரி, ஆகஸ்ட் 10 : புதுச்சேரியில் பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரெஸ்டோ பாரில் மது அருந்தியபோது, பெண் ஒருவரை இடித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பவுன்சர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நண்பர்களுடன் புதுச்சேரி சென்ற நிலையில், இளைஞர் உயிரிழந்தார். தமிழகத்தை விட புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைவாக இருக்கும். இதனால் இளைஞர்கள் முதல் பலரும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார்கள். குறிப்பாக, வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு இளைஞர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு, அனைத்து இடங்களிலும் ரெஸ்டோ பார்கள் போன்றவை அதிகளவில் இருக்கும். இந்த நிலையில், இளைஞர் ஒருவர் பாரில் குத்திக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




அதாவது, சென்னையில் இருந்து கல்லூரி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளனர். அங்கு மிஷன்வீதியில் உள்ள ரெஸ்டோ பாருக்கு வந்துள்ளனர். அங்கு மாணவர்கள் மது அருந்தி நடமாடி கொண்டிருந்தனர். அப்போது, பாரில் இருந்து பெண் ஒருவரை இடித்ததாக கூறப்படுகிறது. இதனால், ரெஸ்டோ பார் உரிமையாளர் மற்றும் பவன்சர்கள் கல்லூரி மாணவர்களை பாரில் இருந்த வெளியேற கூறியுள்ளனர். அப்போது, பவன்சர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால், கல்லூரி மாணவர்கள் பாரில் இருந்து வெளியே செல்ல மறுத்துள்ளனர்.
Also Read : 17 ஆண்டுகள் பகை.. தந்தை கொலைக்கு பழிதீர்த்த மகன்.. சென்னையில் அதிர்ச்சி!
சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்
இதனால், பவன்சர்கள் மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். அப்போது, பவன்சர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆத்திரம் அடைந்த பவன்சர் ஒருவர், கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை குத்தியதாக தெரிகிறது. இதில் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்த ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
இதனை அடுத்து, உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு மாணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read : திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கு.. 2 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரெஸ்டோ பார் உரிமையாளர், பவன்சர்கள், கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர் சண்முகபிரியன் (21) என தெரியவந்துள்ளது. மேலும், சாஜன் என்ற மாணவருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்ற நிலையில், இளைஞர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.