திருமணம் செய்வதாக மோசடி.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
Dindigul Crime News: திண்டுக்கல் மாவட்டத்தில் திருமண வாக்குறுதி அளித்து கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி, காதலிப்பதாக கூறி வைகை அணையில் மாணவியை வன்கொடுமை செய்து, நிர்வாண வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

திண்டுக்கல், அக்டோபர் 8: திண்டுக்கல் மாவட்டத்தில் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள சிலுக்குவார் பட்டி ஆரோக்கிய நகரில் ஜோஸ் மரிய ராகுல் என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 28 வயதான இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் கல்லூரி மாணவி ஒருவருடன் பேசத் தொடங்கியுள்ளார். இவர்களின் நட்பு நாளுக்கு நாள் விரிவடைந்துள்ளது. எதிர்மனையில் பேசிய அந்த மாணவி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர். பெற்றோரை இழந்த அந்தப் பெண் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி காதலிப்பதாக ஜோஸ் மரிய ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். உன்னை நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் நாம் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் உன் வீட்டில் எப்படி இந்த திருமணத்திற்கு சம்மதிப்பார்கள்? என அந்த மாணவி கேட்டுள்ளார். ஆனால் எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ சம்மதம் மட்டும் சொன்னால் போதும் என ஜோஸ் மரிய ராகுல் கூற அந்தப் பெண்ணும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மேட்ரிமோனி மூலம் மோசடி.. ரூ.2.27 கோடியை இழந்த ஆசிரியை!
இதன் பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து வெளியே சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி வைகை அணைக்கு மாணவியை வரவழைத்து ஜோஸ் மரிய ராகுல் அங்குள்ள பூங்காவை சுற்றிப் பார்த்த பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவரை அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் அந்த மாணவியை நிர்வாணமாக வீடியோவும் எடுத்துள்ளார். இதனைக் காட்டி அந்த மாணவியை மிரட்டி அடிக்கடி தனிமையில் இருக்க வேண்டும் என அழைத்துள்ளார். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த மாணவி ஜோஸ் மரிய ராகுலிடம் கேட்டபோது அதனை கண்டு கொள்ளாமல் தட்டிக் கழித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: திருமணம் செய்வதாக மோசடி.. குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
இந்த நிலையில் அவர் தன்னை ஏமாற்ற நினைக்கிறாரோ என சந்தேகமடைந்த கல்லூரி மாணவி நேராக அவரது வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டிருக்கிறார். ஆனால் ஜோஸ் மரிய ராகுலின் பெற்றோர் தரக்குறைவான வார்த்தைகளை பேசி மாணவியை அவமானப்படுத்தியுள்ளனர். மேலும் மாணவி சார்ந்த சமூகம் பற்றி கூறி எக்காரணம் கொண்டும் உன்னைன் எங்கள் மருமகளாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். எனது மகனுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாக ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல், திருமணம் செய்வதாக ஏமாற்றிய ஜோஸ் மரிய ராகுல் மற்றும் அவரது பெற்றோரை தேடி வருகின்றனர்.