திண்டுக்கல்லில் பயங்கரம்.. பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை.. நடந்தது என்ன?
Dindigul BJP Functionary Murder : திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், பாஜக நிர்வாகியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. முதற்கட்ட விசாரணையில், நிதி தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

திண்டுக்கல், ஜூலை 04 : திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட (Dindigul BJP Functionary Murder) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஜூலை 3ஆம் தேதியான நேற்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், பாஜக நிர்வாகியை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சமீப நாட்களில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, கட்சி நிர்வாகிகள் கொலை செய்யப்படுவது தொடர் கதையாகி உள்ளது. அண்மையில் கூட, திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஐந்து பேர் கைதாகி உள்ளனர். அதைத் தொடர்ந்து திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. இந்த சூழலில், தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே ராஜகப்பட்டியைச் சேர்ந்தவர் 39 வயதான பால கிருஷ்ணன். இவர் சாணார்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவர் மணல் விற்பனை, லாரி தொடர்பாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், 2025 ஜூலை 3ஆம் தேதி மாலை 6 மணியளவில் மடூர் பிரிவில் முத்தாலம்மன் பூஞ்சோலை கோயில் அருகே நண்பர்களுடன் பால கிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பாலகிருஷ்ணனை சரிமாரியாக வெட்டியுள்ளனர்.




பின்னர், அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாலகிருஷ்ணனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
நிதி தகராறால் கொலை
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் துணை கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
பாலகிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், நிதி தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த கொடூரமான தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளம் காணவும், அதற்கான நோக்கத்தைக் கண்டறியவும் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்
முன்னதாக, கிருஷ்ணரியில் 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனதாக பெற்றோர் புகார் அளித்த நிலையில், 2025 ஜூலை 3ஆம் தேதி சடலமாக சிறுவன் மீட்கப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணைய்ல மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்ததை சிறுவன் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என கருதி, சிறுவனை அவர்கள் கடத்தி சென்று கொலை செய்தது தெரியவந்துள்ளது.