தூத்துக்குடியில் கூகுள் பே வால் ஏற்பட்ட தகராறு.. விலக்கி விட சென்ற பால் பண்ணை உரிமையாள் கொலை.. ஒருவர் கைது!
Thoothukudi Dairy Farm Owner Murder : தூத்துக்குடியில் ஜி பே- வில் பணம் அனுப்பியதில் ஏற்பட்ட தகராறில் இருவரை விலக்க சென்ற பால் பண்ணை உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை நாரைக்கிணறு போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தூத்துக்குடியில் பணத்த தகராறில் பால்பண்ணை உரிமையாளரை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அருகே உள்ள நாரைக்கிணறு பகுதியில் உள்ள கே. கைலாசபுரத்தில் வசித்து வந்தவர் நடேஸ்குமார் ( 44 வயது). இவர், அந்தப் பகுதியில் சொந்தமாக பால்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று புதன்கிழமை ( நவம்பர் 17- ஆம் தேதி) இரவு அந்தப் பகுதியில் உள்ள கடை அருகே நடேஷ் குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு மர்ம நபர் திடீரென கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில், நரேஷ் குமார் பலத்த ரத்த காயம் அடைந்து அங்கேயே மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மற்றும் அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒருவரை பிடித்து நாரைக்கிணறு போலீசார் விசாரணை
ஆனால், செல்லும் வழியிலேயே நடேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாரைக் கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், புதியம்புத்தூர் அருகே உள்ள புதுப்பச்சேரி கிராமம், வடக்கு தெருவில் வசித்து வரும் வெற்றிவேல் என்பவரது மகன் மகாராஜன் ( 35 வயது) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் படிக்க: இலங்கைக்கு ரூ. 60 லட்சம் பீடி இலைகள் கடத்தல் முயற்சி.. சினிமா பாணியில் நடந்த சேஷிங்.. 2 பேரை தூக்கிய க்யூ பிரிவு போலீஸ்!
கூகுள் பே பணம் அனுப்பும் தகராறில் நிகழ்ந்த கொலை
அவரை, போலீசார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடையில் மகாராஜன் மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு கூகுள் பே மூலமாக பணம் செலுத்தியதாக தெரிகிறது. ஆனால், அவரது செல்போன் கூகுள் பே வில் பணம் குறைவாக இருந்ததாக தெரிகிறது. இதனால், கடையின் உரிமையாளருக்கும், மகாராஜனுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த பால்பண்ணை உரிமையாளர் நடேஷ் குமார் இருவரிடையே சமரசம் செய்து விலக்கி விட்டு உள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்ட நபர்
அப்போது, மகாராஜனை, நடேஷ் குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரம் அடைந்த மகாராஜன் அங்கு இருந்த கத்தியால் நடேஷ் குமாரை குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மகாராஜனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: வேலூரில் அதிர்ச்சி.. ரூ.6.5 கோடி ரயில்வே பொருட்கள் கொள்ளை.. முக்கிய குற்றவாளி உள்பட 5 பேர் கைது!