Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tirunelveli: நஷ்ட ஈடு பிரச்னை.. அண்ணனுக்கு பதில் தம்பி கொலை

Tirunelveli Crime News: திருநெல்வேலியில் அண்ணனின் தகராறு காரணமாக தம்பி அருண் செல்வம் பழிவாங்கும் நோக்கில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கி முத்து, கார்த்திக்கின் கார் கண்ணாடியை உடைத்ததற்கு நஷ்ட ஈடு கேட்டதால் முன்விரோதம் ஏற்பட்டது கொலையில் முடிந்துள்ளது.

Tirunelveli: நஷ்ட ஈடு பிரச்னை.. அண்ணனுக்கு பதில் தம்பி கொலை
அருண் செல்வம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 18 Oct 2025 07:39 AM IST

நெல்லை, அக்டோபர் 18: திருநெல்வேலியில் நஷ்ட ஈடு கேட்ட தகராறில் அண்ணனுக்கு பதிலாக தம்பி பழிவாங்கும் நோக்கில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள கோவில்பத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவருக்கு அருண் செல்வம் மற்றும் கார்த்திக் என இரு மகன்கள் உள்ளனர். இதில் அண்ணன் கார்த்திக்கின் கார் கண்ணாடியை ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கி முத்து என்ற போஸ் என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடைத்ததாக சொல்லப்படுகிறது. அதற்கான நஷ்டஈட்டை கார்த்திக் கேட்ட நிலையில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (அக்டோபர் 16) இரவு கிருஷ்ணாபுரம் அருகே இருக்கும் டாஸ்மாக் பாருக்கு தம்பி அருண் செல்வம் தனது நண்பரான செய்துங்கநல்லூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் ஜலீலுடன் சென்றுள்ளார். அங்கு இசக்கி முத்துவும் தனது நண்பர்களுடன் மது அருந்த வந்துள்ளார். அருண் செல்வதை பார்த்ததும் அவரை கார்த்திக் என நினைத்து அவரிடம் தகராறு ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அவரிடம் பேசிய அருண் செல்வம். நீங்கள் பார்த்தது எனது அண்ணன். நான் கிடையாது என தெரிவித்துள்ளார். ஆனால் அதனை காதில் வாங்கிக் கொள்ளாத இசக்கி முத்து அரிவாளை எடுத்துக்கொண்டு தகராறில் ஈடுபட்டதால் நிலைமை மோசம் அடைந்ததை உணர்ந்த அருண் செல்வம் தனது நண்பர் ஜலீலுடன் அங்கிருந்து பைக்கில் புறப்பட்டு சென்று விட்டார்.

Also Read: மனைவியை கொலை செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய மாஸ்டர் பிளான் போட்ட கணவன்.. 6 மாதங்கள் கழித்து சிக்கியது எப்படி!

ஆனால் ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த இசக்கிமுத்து அவர்களை பின்தொடர்ந்து விரட்டியுள்ளார். அவரிடம் இருந்து தப்பிக்க செய்துங்கநல்லூர் பிரதான சாலையில் செல்வதற்கு பதிலாக அருகில் உள்ள காவல்துறை சோதனை சாவடிக்கு செல்லலாம் என அருண் செல்வம் எதிர்பாராத விதமாக தவறான பாதையில் பைக்கை ஓட்டியுள்ளார்.

எதிர்திசையில் வாகனங்கள் வந்ததால் அவரால் வேகமாக செல்ல முடியவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணாபுரம் பெட்ரோல் பங்க் அருகே அருண் செல்வம் சென்றபோது இசக்கி முத்துவும் அவரது நண்பர்களும் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் முதுகிலும் மணிக்கட்டிலும் பலத்த காயமடைந்த அருண் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Also Read: Madurai: பெற்றோருடன் தகராறு.. 10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

இந்த சம்பவத்தில் தடுக்க வந்த ஜலீலின் தலையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து சிவந்திப்பட்டி காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அருண் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஜலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இசக்கி முத்து மற்றும் அவருடன் வந்த நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறையை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி கொலை செய்த இசக்கி முத்து என்ற போஸ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.