Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரே நாளில் 16 பேர்.. ஒரு மணி நேரத்தில் 11 பேர்.. கடித்து குதறிய தெரு நாய்..

Tirunelveli: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்க புரத்தில் (வி.கே. புரம்) செப்டம்பர் 19, 2025 அன்று, ஒரு மணி நேரத்திற்குள் மட்டும் சுமார் 11 பேரை தெருநாய்கள் கடித்து குதறியுள்ளது. சிறுவன் உட்பட 11 பேரில், ஐந்து பெண்களும், ஐந்து ஆண்களும் அடங்குவர்.

ஒரே நாளில் 16 பேர்.. ஒரு மணி நேரத்தில் 11 பேர்.. கடித்து குதறிய தெரு நாய்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Sep 2025 09:00 AM IST

நெல்லை, செப்டம்பர் 20, 2025: திருநெல்வேலியில் ஒரே நாளில் 16 பேரை தெருநாய்கள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருக்களில் நடமாடவே முடியாத அளவிற்கு இந்த தொல்லை உருவெடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினசரி நாய்கடி சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இந்திய அளவில் நாய்கடி சம்பவங்களில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது. இதற்காக பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அச்சுறுத்தலாக மாறும் தெரு நாய்கள்:

தமிழகத்தில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார் 22 பேர் தெருநாய் கடியால் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, தெருநாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து நாய் பிரியர்கள் பலரும் கருத்து தெரிவித்ததோடு, நாடு முழுவதும் பல மாவட்டங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து அந்தத் தீர்ப்பு திருத்தப்பட்டது. இது ஒரு பக்கம் இருந்தாலும், நாய்கடி சம்பவங்கள் தொடர்கதையாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக தெருக்களில் விளையாடும் குழந்தைகளையும், நிற்கும் சிறியவர்களையும் குறிவைத்து நாய்கள் கடிப்பது அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க: பழங்குடியின மாணவன் மீது தலைமையாசிரியர் கொலைவெறி தாக்குதல்!

ஒரு மணி நேரத்தில் 11 பேரை கடித்த தெரு நாய்:

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்க புரத்தில் (வி.கே. புரம்) செப்டம்பர் 19, 2025 அன்று, ஒரு மணி நேரத்திற்குள் மட்டும் சுமார் 11 பேரை தெருநாய்கள் கடித்துள்ளன. சிறுவன் உட்பட 11 பேரில், ஐந்து பெண்களும், ஐந்து ஆண்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக, ஒரே நாளில் 16 பேரை தெருநாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: விஜய் பிரச்சாரம் பயணத்தில் மாற்றம்.. செப். 27 சென்னையில் பிரச்சாரம் இல்லை..

இது தொடர்பாக பேசிய அப்பகுதி மக்கள், “தெருவில் நடமாடவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்கே, எப்போது, எங்கிருந்து நாய் துரத்தும் என்ற அச்சத்துடனே வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கே பயமாக உள்ளது” என கூறினர்.

9 மாதங்களில் 3.60 லட்சம் பேருக்கு நாய்க்கடி:

2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை சுமார் 3.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாய்கடிக்கு ஆளாகியுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாய்கடி சம்பவங்கள் தொடரும் நிலையில், தெருநாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.