Pudukkottai: பழங்குடியின மாணவன் மீது தலைமையாசிரியர் கொலைவெறி தாக்குதல்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பழங்குடியின மாணவன் மீது தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி சாதி ரீதியான தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை உபாதை கழித்ததற்காக மாணவனை தாக்கியதாகவும், சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, செப்டம்பர் 20: புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்த பழங்குடியின மாணவர் மீது சாதிய ரீதியிலான தாக்குதல் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ஈடுபட்டது தான் வேதனையின் உச்சமாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னதால் சாதி, சமயம் என மக்கள் பிரிந்து கிடந்தாலும் கல்வி நிலையங்கள் அத்தகைய வேறுபாடுகள் களையப்படும் இடமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக பள்ளி, கல்லூரிகளில் சாதிய, மத ரீதியிலான மோதல்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் குருவாக கருதப்படும் ஆசிரியரே அத்தகைய செயலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவனை கடுமையாக தாக்கிய தலைமையாசிரியர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீமிசல் அருகே கீழ ஏம்பல் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் அதில் அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் ஒருவர் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஆரோக்யா சாமி என்பவர் அந்த மாணவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
Also Read: தந்தையுடன் தொடர்பில் இருந்த பெண்ணை வெட்டிக் கொன்ற 16 வயது சிறுவன்!
இதில் அந்த மூன்றாம் வகுப்பு மாணவருக்கு மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்ட நிலையில், சிறுவன் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே எதற்காக மாணவரை தலைமை ஆசிரியர் இந்த அளவு கொடூரமாக தாக்கினார் என விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது .
அதன்படி சம்பந்தப்பட்ட அந்த மாணவன் பள்ளியில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். ஆனால் அதை யார் சுத்தம் செய்வார்கள் என கேட்டு அந்த மாணவனை தலைமை ஆசிரியர் அடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து நியாயம் கேட்க மாணவனின் பெற்றோர் தலைமை ஆசிரியர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களை சாதி பெயரை சொல்லித் திட்டியதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read: வியாபாரியிடம் 12 கிலோ தங்கம் திருட்டு.. மிளகாய் பொடி தூவி கும்பல் அட்டூழியம்.. திருச்சியில் சம்பவம்!
மேலும் தலைமை ஆசிரியருடன் சேர்ந்து அந்த கிராம மக்களும் தங்களை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாடோடி பழங்குடியினத்தைச் சார்ந்த ஏழு பேர் படித்து வரும் சூழலில் அவர்கள் யாருமே அந்த பள்ளியில் படிக்க கூடாது என சொல்லி மிரட்டியதாக தகவல் தெரிவிக்கின்றது. வீடியோ அடிப்படையில் 10 பிரிவுகளின் கீழ் தலைமையாசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.