Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பள்ளிகளில் முகக் கவசம் கட்டாயமா? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Covid Cases : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 216 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பள்ளிகளில் மாணவர்கள் முகக் கவசம் அணிய வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளிகளில் முகக் கவசம் கட்டாயமா? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு
அமைச்சர் அன்பில் மகேஷ்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 04 Jun 2025 13:53 PM

சென்னை, ஜூன் 04 : இந்தியாவில் கொரோனா தொற்று  (Covid Cases) அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், பள்ளிகளில் முகக் கவசம் அணிய வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், இதற்கு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (minister anbil mahesh) விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசுகையில், “தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும், அந்த அளவிற்கு வீரியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், பள்ளிகல்வித்துறை சார்பாக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக் கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்” என இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு

தமிழகத்தில் 2025  மே மாதத்தில் இருந்தே கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில்  216 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொரோனா தொற்றால் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.  கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,  பொது  இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது.

மேலும்,  கொரோனா தொற்று அறிகுறிகள் இருக்கும் நபர்களுடன் தூரத்தை கடைபிடிக்கவும், சளி, இருமல், சுவாச பிரச்னை இருந்தால் மருத்துவமனை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கொரோனா பரவல் குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” கொரோனா பரவலால் பதற்றப்படத் தேவையில்லை.

முதியவர்கள், கர்ப்பிணிகள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிய வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும். மத்திய அரசு கூறிய அறிவுறுத்தல்களை நாங்களும் கூறி வருகிறோம்” என்றார். இந்த சூழலில் தான்,  தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக் கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருக்கிறார்.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்

இந்தியாவில் 2025 மே மாதத்தில் இருந்தே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில்  4302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1373 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,  டெல்லியில் 457 பேரும், குஜராத்தில் 461 பேரும், கர்நாடகாவில் 324 பேரும், மகாராஷ்ராவில் 510 பேரும், மேற்கு வங்கத்தில் 432 பேரும், உத்தர பிரதேசத்தில் 201 பேரும், ஆந்திராவில் 31 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும்,  இந்தியாவில் 44 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 4 பேரும், தமிழகம், டெல்லி, குஜராத்தில் தலா ஒருவர் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.