கோயிலுக்குள் வைத்து இரண்டு முதியவர்கள் வெட்டிக்கொலை.. உண்டியலை திருட வந்தவர்கள் செய்த கொடூரம்!
Temple Guards Brutally Killed Inside the Temple | விருதுநகரில் உள்ள நச்சாடை தவிர்த்தருளி சுவாமி கோயிலில் இரண்டு முதியவர்கள் இரவு நேர காவலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோயில் உண்டியலை கொள்ளை கும்பல் திருட முயன்றபோது அவர்களை தடுக்க முயன்ற முதியவர்களை அந்த கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது.

மாதிரி புகைப்படம்
விருதுநகர், நவம்பர் 11 : விருதுநகர் (Virudhunagar) மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் நச்சாடை தவிர்த்தருளி சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று (நவம்பர் 10, 2025) காவலர்கள் இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை திருட முயற்சி செய்துள்ளனர். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர்கள் கொள்ளையர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த கொள்ளையர்கள் இரண்டு காவலர்களையும் கோயிலுக்குள்ளேயே வைத்து வெட்டி கொலை செய்துள்ளனர்.
கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பல்
கோயிலுக்கு காவல் பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் பலியாகி கிடப்பதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய அந்த கிராம மக்கள் உடனடியாக அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காவலாளிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், கோயிலுன் உண்டியல் சேதமாகி இருந்ததால் கொள்ளையர்கள் கொலை செய்துவிட்டு உண்டியலை திருடாமல் அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பார்கள் என்று கணித்துள்ளனர்.
இதையும் படிங்க : கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்த 5 சிறுவர்கள்.. ஒரு லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய நயினார் பாலாஜி
விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள காவல்துறை
கோயிலுக்கு காவலில் இருந்த பேச்சிமுத்து என்ற 50 வயது முதியவரும், சங்கரபாண்டியன் என்ற 65 வயது முதியவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கோயிலில் பழமை வாய்ந்த பொருட்கள், சிலைகள் மற்றும் நகைகள் ஏதேனும் காணாமல் போயுள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : 2000 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை
இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சம்பவ இடத்திற்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.