ரூ.2 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்தி கொலை செய்த நபர்…. சுட்டுப்பிடித்த போலீசார்… ஓசூர் அருகே பரபரப்பு
Businessman murder case : ஓசூர் அருகே தொழிலதிபரை கடத்தி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவி பிரசாத் ரெட்டியை காலில் சுட்டு பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விசாரணையில் ஏற்கனவே அவர் மற்றொரு தொழிலதிபரையும் கொலை செய்தது தெரிய வந்தது.
கர்நாடக மாநிலத்தில் தொழிலதிபரை கடத்தி, கொலை செய்த குற்றவாளியை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பொம்மசந்திரா பகுதியில் வசித்து வந்த ரவி பிரசாத் ரெட்டி என்ற நபர் அங்கு லாட்டரி வியாபாரம் செய்து வந்தார். சமீபத்தில் வியாபாரத்தில் பெரும் இழப்பை சந்தித்ததால் நிலையில், பணக்காரர்களிடம் பணம் பறிக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த நவம்பர் 4, 2025 அன்று அவர் பெங்களூரில் உள்ள கிட்டனஹள்ளி பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்ற தொழிலதிபரிடம் பணம் கேட்க சென்றுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால், ரவி பிரசாத் ரெட்டி அவரை கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தொழிலதிபரை கடத்தி கொலை
இந்த நிலையில், கடந்த நவம்பர் 6 2025 அன்று ரவி பிரசாத் ரெட்டி, தொழிலதிபர் பாலப்பா ரெட்டி என்பவரை 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் ஜிகினி இன்டர் ரிங் ரோட்டில் அவரை கடத்தி, அவரது குடும்பத்தாரிடம் வேறு மொபைல் எண் மூலம் பணம் கேட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருக்கு பணம் கிடைக்காததால், பாலப்பா ரெட்டியையும் கொலை செய்து, அவரது உடலை தமிழ்நாடு எல்லைப்பகுதியான ஒசூர் அருகே உள்ள சணமாவு காட்டுப்பகுதியில் அவரது உடலைப் போட்டுள்ளார்.
குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்
இந்த கொடூரக் கொலை குறித்து கர்நாடக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர் விசாரணையில் மாதேஷை கொலை செய்த ரவி பிரசாத் ரெட்டி தான், பாலப்பா ரெட்டியையும் கொலை செய்திருப்பது தெரிய வந்ததது. இந்த நிலையில் குற்றவாளி ரவி பிரசாத் ரெட்டி என அடையாளம் கண்டனர். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் எனவும், பல ஆண்டுகளாக கர்நாடகாவில் வசித்து வந்ததாகவும் தெரியவந்தது.




இந்த நிலையில் நவம்பர் 8, 2025 அன்று இரவு போலீசார் அவரை கைது செய்யச் சென்றபோது, அவர் போலீசார்மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் தலைமைக் காவலர் அசோக் காயமடைந்தார். இதனையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக ஆய்வாளர் சோமசேகர் இரண்டு முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஆனால் ரவி பிரசாத் ரெட்டி சரணடைய மறுத்ததால், போலீசார் ரவி பிரசாத்தின் இரு கால்களிலும் சுட்டு அவரை கட்டுப்படுத்தினர்.
காயமடைந்த ரவி பிரசாத் ரெட்டி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் ஓசூர் அருகிலுள்ள சணமாவு காட்டுப் பகுதியில் தேடுதல் நடத்தி, பல நாட்களாக மாயமான தொழிலதிபர் பாலப்பா ரெட்டியின் உடலை மீட்டுள்ளனர். கர்நாடக போலீசார் தற்போது இரண்டு கொலை வழக்குகளிலும் ரவி பிரசாத் ரெட்டியை விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.