Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குற்ற உணர்ச்சியே இல்லாமல் பேசுகிறார் விஜய்.. வைகோ கடும் கண்டனம்!!

Vaiko condemns vijay: கரூர் கொடுந்துயருக்கு முழு காரணமான விஜய் குற்ற உணர்ச்சியே இல்லாமல் முதலமைச்சர் மீது அவதூறு பரப்புவதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு, விஜய் இனியாவது, நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தைக் கடைபிடித்து ஒழுங்காக பேச வேண்டும் என்றும் விலியுறுத்தியுள்ளார்.

குற்ற உணர்ச்சியே இல்லாமல் பேசுகிறார் விஜய்.. வைகோ கடும் கண்டனம்!!
வைகோ, விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Nov 2025 11:20 AM IST

சென்னை, நவம்பர் 06: பொதுவாழ்வில் ஆத்திசூடி கூட அறியாத விஜய், ஆட்சிக்கு வந்துவிட்டதை போல கனவுலகில் வாழ்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். முன்னதாக, கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரு அரசியல் தலைவர் கூட்டத்தில் இப்படி ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்தது நாடையே அதிர்ச்சியடைய செய்தது. தொடர்ந்து, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதேபோல், விஜய் தரப்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

Also read: நறுக்கு நறுக்கு என்று குட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா? விஜய் ஆவேசம்!

வேகமெடுத்த தவெக செயல்பாடு:

எனினும், கரூருக்கு விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்காமல் இருந்தார். இதனால், ஒரு மாதகாலமாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த விஜய், அரசியல் செயல்பாடுகளும் இல்லாமல் இருந்தார். இதைத்தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கடந்த அக்.27ம் தேதி சென்னை தனிப்பேருந்து மூலம் வரவழைத்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்தார். இதையடுத்து, தவெகவின் செயல்பாடு வேகமெடுத்தது. கட்சி நிர்வாகிகள் குழுக்களில் அதிரடி மாற்றம் செய்தார். அரசையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். அந்தவகையில், சென்னை மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்கூட்டம் நடந்தது.

முதல்வர் மறந்துவிட்டாரா?

இதில் கலந்துக்கொண்டு பேசிய விஜய், முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை எனக்கூறி வன்ம அரசியல் செய்கிறார்கள். அரசியல் காழ்ப்புடன், நேர்மை இல்லாமல் குறுகிய மனதுடன் வடிகட்டிய பொய்யை சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசியதாக விமர்சித்தார். அதோடு,
உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் தலையில் ஓங்கி நறுக்கு நறுக்கு நறுக்கு என்று குட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், 2026ல் இரண்டே இரண்டு கட்சிக்கு தான் போட்டியே ஒன்று தவெக இன்னெற்று திமுக என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஜய்யின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பொதுவாழ்வில் ஆத்திசூடி கூட அறியாத விஜய், ஆட்சிக்கு வந்துவிட்டதை போல கனவுலகில் வாழ்வதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதல்வர் மீது வெறுப்பு:

அதில், கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி அன்று குழந்தைகள், தாய்மார்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக பலியாகி உயிரிழந்ததற்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டிய தவெக தலைவர் விஜய், தரம் தாழ்ந்த முறையில், கண்ணியமற்ற வகையில் திசை திருப்புவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது வெறுப்பையும், கசப்பையும் பொதுக்குழு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார்.

குற்ற உணர்ச்சி இல்லாத விஜய்:

நடந்த சம்பவத்துக்கு துளியளவும் வருத்தப்படாமல் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர் பொறுப்பற்று நடந்துகொண்டது மிக, மிக தவறான போக்கு ஆகும். பொதுவாழ்வில் ஆத்திசூடியைக்கூட அறியாத இந்த மனிதர் தான் ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போலவே கனவுலகத்திலும், கற்பனை வாழ்விலும் திளைக்கிறார்.

Also read: Karur Stampede: கரூர் நெரிசலுக்கு காரணம் திமுகவின் அலட்சியமா? தவெகவின் முதிர்ச்சியற்ற திறனா? விரிவான பார்வை!

காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார். ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார். அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும். 75 ஆண்டுகளை, ஆம் முக்கால் நூற்றாண்டை கண்ணீரிலும், வியர்வையிலும், கொட்டிய குருதியிலும், சிறைச்சாலைகளிலும் கடந்து வந்த தியாகிகள் கோட்டையாம் திமுகவை சற்றும் மான வெட்கம் இன்றி எள்ளி நகையாட முனைகின்ற அவரது நிலைமை அனுதாபத்திற்கும், பரிதாபத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். இனிமேலாவது அவர் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.