‘வெற்றி பயணம்’ திட்டத்தின் புதிய விதிகள் என்னென்ன?.. முழு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
Vetri Payanam Scheme Guidelines Released: தமிழக அரசால் அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட ‘வெற்றி பயணம்’ கட்டணமில்லாப் பேருந்து திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக 17 புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் திருநர்களுக்குக் கட்டாயம் ‘ஜீரோ டிக்கெட்’ வழங்க வேண்டும் என்றும், சேவை குறைபாடு மற்றும் நடத்துநர்களின் அலட்சியம் குறித்து எவ்வித புகாரும் வரக்கூடாது என்றும் அதிகாரிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, அக்.05: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, பெண்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு ‘வெற்றி பயணம்’ என்னும் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தைக் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தது. மகளிர் மற்றும் திருநர்கள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இத்திட்டம் எவ்வித தடையுமின்றி அனைத்துப் பகுதி மக்களையும் சென்றடைவதையும், சேவை குறைபாடுகள் ஏதுமின்றி வெற்றிகரமாகச் செயல்படுவதையும் உறுதி செய்யும் பொருட்டுப் போக்குவரத்துத் துறை சார்பில் 17 முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: “தெருத்தெருவாக பிரசாரம் செய்வதற்கு தோல்வி பயமே காரணம்!”.. முதல்வர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!!
‘ஜீரோ டிக்கெட்’, நிபந்தனையற்ற பயணச் சலுகை:
வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தகுதியான மகளிர், சிறுமியர் மற்றும் திருநர்களிடம் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு இலவசப் பயணத்தின் போதும் ‘ஜீரோ டிக்கெட்’ (Zero Ticket) கட்டாயம் வழங்கப்பட வேண்டும். இத்திட்டத்தின்கழ் பயனடைவதற்கு எந்தவொரு வருமான உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், பயணங்களின் எண்ணிக்கைக்கு எவ்விதக் கட்டுப்பாடோ அல்லது வரம்போ கிடையாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மாநகர, நகர, புறநகர் சாதாரண பேருந்துகள், எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ் (LSS), டீலக்ஸ் மற்றும் மலைப் பகுதிப் பேருந்துகளில் பயணிகள் தடையின்றி கட்டணமின்றிப் பயணிக்கலாம்.
பேருந்துகளில் ‘வெற்றி பயணம்’ ஸ்டிக்கர்கள்:
பொதுமக்கள் மற்றும் பயணிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில், பேருந்துகளில் ‘வெற்றி பயணம்’ திட்ட விவரங்களைக் தெளிவாகக் காட்சிப்படுத்தக்கூடிய டிஜிட்டல் வழித்தடப் பலகைகள் (Digital Route Boards) இருப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். டிஜிட்டல் பலகைகள் இல்லாத பேருந்துகளில், அரசாரால் அங்கீகரிக்கப்பட்ட ‘வெற்றி பயணம்’ லோகோ அடங்கிய ஸ்டிக்கர்களை முன்பகுதியிலும் பின்பகுதியிலும் கட்டாயமாக ஒட்ட வேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பரிசோதனை அதிகாரிகள் இத்திட்டத்தின் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி ஜீரோ டிக்கெட் வழங்குவதைக் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
இதையும் படிக்க: சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் கோர விபத்து.. பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த ஆம்னி பேருந்து.. 2 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து!
அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை:
முக்கியப் பேருந்து நிலையங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ள கல்வி நிறுவனப் பகுதிகள், தொழிற்சாலை மண்டலங்கள், மருத்துவமனைகள் மற்றும் உழவர் சந்தைப் பகுதிகள் ஆகியவற்றில் போக்குவரத்துத் துறை சூப்பர்வைசர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் நேரடி கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்துகளுக்காகப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பது, பேருந்துகளில் அளவுக்கு அதிகமான நெரிசல் ஏற்படுவது, பேருந்து வருகை தாமதமாவது மற்றும் நடத்துநர்களின் சேவை குறைபாடு தொடர்பாகப் பொதுமக்களிடம் இருந்து எந்தவொரு புகாரும் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள ஆய்வின் போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.