Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. அலர்ட் மக்களே!!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களிலும் காலை முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி மாணவர்களும், பெற்றோரும் காலை முதல் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று காத்திருந்தனர். ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. அலர்ட் மக்களே!!
கோப்புப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 01 Dec 2025 12:48 PM IST

சென்னை, டிசம்பர் 01: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, காலை முதல் இந்த மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தற்போது தான் கனமழைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  கனமழை பெய்து வரும் எந்த மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. அதனால், கொட்டும் மழையிலும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

Also read: சென்னையில் காலை முதல் பலத்த மழை.. தவித்த பள்ளி மாணவர்கள்!!

12 மணி நேரத்தில் வலுவிழக்கும்:

தற்போது சென்னைக்கு 50 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (தித்வா புயல்) மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 10 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதோடு, அடுத்து 12 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்திருந்தது.

சென்னைக்கு 50 கி.மீ தொலைவில்:

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்ட தகவலின்படி, நேற்று காலை வட தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் நிலவிய தித்வா புயலானது நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்தது. தொடர்ந்து, அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடதிசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 50 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இதுதொடர்ந்து, வட திசையில், வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு இணையாக நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறையக் கூடும் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also read: “இலங்கைக்கு துணை நிற்க தமிழ்நாடு தயார்”.. முதல்வர் ஸ்டாலின் உறுதி !!

பெற்றோர் ஆதங்கம்:

குறிப்பாக, வாரத்தின் முதல் நாளான இன்று பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என நகரம் வழக்கமாகவே பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், காலை முதல் விடாமல் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருவதால், பள்ளி மாணவர்களும், பெற்றோரும் விடுமுறை கிடைக்காத என்று தவித்தனர். எனினும், அவ்வாறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனால், கொட்டும் மழையில் குடைகளை பிடித்தப்படி கடும் சிரமங்களுடன் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர். தொடர்ந்து, தற்போது மிக கனமழை அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், முன்கூட்டியே இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால் மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கலாம் என பெற்றோர் ஆதங்கம் தெரிவத்துள்ளனர்.