விஜய் மீது ஏன் வழக்கு போடவில்லை? – திருமாவளவன் கேள்வி!
கரூர் சோக சம்பவத்தில் நடிகர் விஜய் மீது ஏன் வழக்குப் பதியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கும் விஜய்க்கும் மறைமுக தொடர்பு உள்ளதா என சந்தேகித்த அவர், விஜய் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும், பாஜக அவரைப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

திருச்சி, அக்டோபர் 2: கரூர் சோக சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது ஏன் வழக்குப் போடவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வியெழுப்பியுள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், விஜய் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பாஜகவுடன் நேரடியாகவும் திமுக மறைமுகமாகவும் உறவு வைத்திருப்பதாக கூறி இருக்கிறாரே.. அதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? என கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், “அதையே தான் நானும் கேட்கிறேன். கரூர் சம்பவத்தில் ஏன் விஜய் மீது வழக்கு போடவில்லை?, விஜய்யை வீட்டில் உட்கார வைத்து பாதுகாப்பு கொடுக்கிறீர்கள்?, விஜய் என்ன வேண்டுமானாலும் பேச ஏன் அனுமதிக்கிறீர்கள்?. சிஎம் சார் என்னிடம் வந்து மோதுங்கள் என சவால் விடுகிறார். இதனை எல்லாம் பார்த்துக் கொண்டு ஏன் காவல்துறை அமைதியாக இருக்கிறது.
அப்படியென்றால் தமிழ்நாடு அரசுக்கும் விஜய்க்கும் ஏதேனும் மறைமுக தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது என கூறினார். கரூர் சம்பவத்தில் விஜய் மீது தவறி இருக்கிறதா அல்லது தமிழக அரசின் மீது தவறு இருக்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை வரட்டும் அப்போது தெரியும் என கூறினார்.
Also Read: பெருங்காய டப்பா போல் காலி ஆகிவிடுவார் விஜய்.. அமைச்சர் சேகர் பாபு கடும் விமர்சனம்!




அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்
மேலும் 35 ஆண்டுகளாக தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் இருக்கிறேன். அதனை வைத்துப் பார்க்கும்போது எண்ணற்ற பல பேரணிகள், மாநாடுகளை நடத்தி இருக்கிறேன். என்னுடைய மாநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள், தாய்மார்கள் பங்கேற்றுள்ளார்கள். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கவனம் செலுத்தி காவல்துறையினருடன் அமர்ந்து பேசி, களத்தில் இறங்கி பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்வோம்.
விஜய் கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது குறித்து கவலைப்படவில்லை. இதில் அவர்தான் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். அவர் முகத்தில் கொஞ்சம் கூட சோக நிழல் கிடையாது. ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகமாகிவிடும் என நினைக்கிறார். மூன்று நாட்கள் வாயை மூடி இருந்து கொண்டு பாஜக ஆர் எஸ் எஸ் சொன்ன பிறகு மூன்று நிமிட வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
Also Read: எம்ஜிஆர், ஜெயலிதா குறித்து அவதூறாக பேசினேனா..? திருமாவளவன் விளக்கம்..!
விஜயை பயன்படுத்த பாஜக முயற்சி
அப்படி பார்த்தால் மக்கள் மீது என்ன பொறுப்பு இருக்கிறது?, நம்பிய மக்கள் மீது என்ன அக்கறை விஜய்க்கு இருக்கிறது?. மேலும் இந்த சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட எந்த முகாந்திரமும் இல்லை எனில் பொதுச் செயலாளர் ஆனந்த் மீதான வழக்கில் மட்டும் எப்படி முகாந்திரம் இருக்கும் எனவும் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய விஜய் போன்ற ஆபத்தான சக்திகளிடம் தமிழகம் சிக்கினால் கலவரம் பூமியாக மாறிவிடும். எப்படி 2014 ஆம் ஆண்டு அண்ணா ஹசாரேவை பயன்படுத்தி பாஜக ஆட்சிக்கு வந்ததோ அதேபோல் விஜயை பயன்படுத்துகிறது. அவர் மூலம் அதிமுகவை அழித்துவிட்டு அந்த இடத்திற்கு பாஜக வர முயற்சிக்கிறது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்