கரூர் விரையும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்? சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டம்..
TVK Leader Vijay Visit To Karur: சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் (செப்டம்பர் 28, 2025) கூட்டத்தின் அடிப்படையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், இழப்பீட்டை நேரில் சென்று வழங்குவதற்காகவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் மாவட்டத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை, செப்டம்பர் 29, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் விரைவில் கரூர் மாவட்டத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அனுமதி கேட்டு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மனு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை முதல் முறையாக சந்திக்க உள்ளது. இதற்காக ஆயத்தமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
விஜயை காண குவியும் மக்கள்:
அந்த வகையில் செப்டம்பர் 13ஆம் தேதி தனது பிரச்சார பயணத்தை திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இருந்து தொடங்கினார். முதல் நாள் பிரச்சாரத்திலேயே கட்டுக்கடங்காத கூட்டம் அவரைக் காண வருகை தந்தது. இதனால் ஒரு நாளுக்கு மூன்று மாவட்டங்கள் என்ற திட்டத்தை மாற்றி, ஒரு நாளுக்கு இரண்டு மாவட்டங்கள் என மாற்றியமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2025 செப்டம்பர் 20ஆம் தேதி நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செப்டம்பர் 27, 2025 அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் இருக்கும் சிக்கல்:
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடமெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசலும், சரியான நேரத்தில் பிரச்சாரம் நடைபெற முடியாத நிலையும் ஏற்படுகிறது. அதுபோல நாகை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் மக்களிடம் உரையாற்றும் போது, “தமிழக வெற்றி கழகம் கேட்கும் இடங்களுக்கு போலீசார் அனுமதி வழங்குவதில்லை; குறுகிய இடத்தில் தான் அனுமதி வழங்குகிறார்கள்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க: முதல் தவறு இவங்க மீது தான், ஏன் அனுமதி கொடுக்கிறார்கள்? – அண்ணாமலை கேள்வி
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு:
இதனைத் தொடர்ந்து 27 செப்டம்பர் 2025 அன்று கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சுமார் 25 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் குவிந்தனர். விஜய் பிரச்சாரம் முடித்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னர் பல மணி நேரம் காத்திருந்த மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறும் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி சுமார் 40 பேர் உயிரிழந்தனர். இந்த துயரமான சம்பவம் நாட்டையே உலுக்கியது.
உடனடியாக கரூர் மாவட்டத்திற்கு திமுக அமைச்சர் அன்பில் மகேஷ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் களத்தில் இறங்கினர். அதேபோல் துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான மு.க. ஸ்டாலின் இரவோடு இரவாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் படிக்க: விஜய் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் – நிபுணர்கள் தீவிர சோதனை
கரூர் விரையும் விஜய்?
இத்தகைய சூழலில் தமிழக வெற்றி கழக தலைவர் தற்போது வரை கரூர் செல்கிறார் என்ற எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால் செப்டம்பர் 28, 2025 அன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், கரூர் மாவட்டத்திற்கு செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், இழப்பீட்டை நேரில் சென்று வழங்குவதற்காகவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் மாவட்டத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அனுமதி கேட்டு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் போலீசில் மனு அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே இன்னும் ஓரிரு நாட்களில் அவர் கரூர் மாவட்டத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.