தூத்துக்குடியில் பைக் மீது கனரக லாரி மோதல்…திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் உள்பட இருவர் உடல் நசுங்கி பலி!
Thoothukudi Road Accident: தூத்துக்குடியில் இரு சக்கர வாகனம் மீது கனரக லாரி மோதிய விபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் உள்பட இருவர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் பலி
தூத்துக்குடி மாவட்டம், நகரப் பகுதியில் உள்ள அமுதா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவரது மகள் முத்து செல்வி என்ற முத்துமாரிக்கு (24 வயது) திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் பிப்ரவரி 15- ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், முத்து செல்வி, தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த உறவினரான மணியாச்சி ஒட்டநத்தம் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரது மகன் கலைச் செல்வன் என்பவருடன் தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் வேலை பார்த்து வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். துறைமுகத்திலிருந்து உரம் ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக முத்துச் செல்வி சென்ற இரு சக்கர வாகனம் மீது அந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
தனியார் மருத்துவமனையில் முதலுதவி
இந்த விபத்தில், முத்து செல்வி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் மீது லாரியின் டயர் ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் முதலுதவி அளித்துவிட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி, அங்கிருந்து இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் படிக்க: திருவள்ளூரில் இருவர் கொடூர கொலை…கஞ்சா போதையில் 4 பேர் வெறிச்செயல்…போலீசார் போட்ட மாவுக்கட்டு!
புதுமண பெண் உள்பட இருவரும் உடல் நசுங்கி பலி
அங்கு, அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த சிறிது நேரத்திலேயே இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முத்து செல்வி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் லாரியின் அடியில் சிக்கினர். இதில், லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர்களது உடல் பாகங்கள் நசுங்கி சேதமடைந்தன. இதன் காரணமாகவே அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் பின்னர், அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.
போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
இந்த விபத்து குறித்து முத்து செல்வியின் தந்தை ராஜா அளித்த புகாரின் பேரில், தெர்மல் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கனரக லாரியின் ஓட்டுனரிடமும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த புதுமண பெண் உள்பட இருவர் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பது உறவினர்கள் மத்தியிலும், அந்தப் பகுதியிலும் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: குன்னூர் அருகே திடீர் மண் சரிவு.. 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி.. பெரும் சோகம்..