சாக்கு மூட்டையில் மனைவியின் சடலம்.. சாலையில் வீசிய கணவன்.. வறுமையால் சென்னையில் நடந்த துயரம்..
காவல் துறையினரின் தீவிர விசாரணையில், உயிரிழந்தவர் திரிசூலம் பகுதியைச் சேர்ந்த பாக்யலட்சுமி (75) என்பது தெரியவந்தது. இவருக்குத் திருமணமாகி 10 பிள்ளைகள் உள்ளனர். எனினும், 15 ஆண்டுகளுக்கு முன்பே இவருடைய கணவர் இறந்துவிட்டதால், பிள்ளைகள் யாரும் இவரை ஆதரிக்கவில்லை. வறுமையிலும் தனிமையிலும் தன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
பணம் இல்லாத காரணத்தால், உயிரிழந்த மனைவியின் உடலை நல்லடக்கம் செய்ய முடியாமல் தவித்த முதியவர் ஒருவர், அதைச் சாக்கு மூட்டையில் கட்டிச் சாலையோரம் வீசிச் சென்ற நெஞ்சை உருக்கும் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் முக்காணி அம்மன் கோவில் அருகே, கடந்த 21-ஆம் தேதி காலையில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அதைத் திறந்து பார்த்தபோது, உள்ளே தலைக்காயங்களுடன், கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி ஒருவரின் சடலம் இருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லாவரம் காவல் துறையினர், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த மூதாட்டி யார், அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடங்கினர்.
மேலும் படிக்க: அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி பலி.. விளக்கம் கேட்ட சக மாணவிகளுக்கு மிரட்டல்.. களத்திற்கு வந்த அமைச்சர்!!
10 பிள்ளைகள் இருந்தும் அநாதையான தாய்:
காவல் துறையினரின் தீவிர விசாரணையில், உயிரிழந்தவர் திரிசூலம் பகுதியைச் சேர்ந்த பாக்யலட்சுமி (75) என்பது தெரியவந்தது. இவருக்குத் திருமணமாகி 10 பிள்ளைகள் உள்ளனர். எனினும், 15 ஆண்டுகளுக்கு முன்பே இவருடைய கணவர் இறந்துவிட்டதால், பிள்ளைகள் யாரும் இவரை ஆதரிக்கவில்லை. இதனால், வேறு வழியின்றி தனியாகப் பூ வியாபாரம் செய்து வறுமையிலும் தனிமையிலும் தன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
வறுமையில் இணைந்த இரு உள்ளங்கள்:
இந்தச் சூழ்நிலையில்தான், திரிசூலம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்த ஆசீர்வாதம் (63) என்ற முதியவருடன் பாக்யலட்சுமிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வறுமையும் தனிமையும் இவர்களை ஒன்றிணைக்க, இருவரும் கணவன்-மனைவியாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ஆனால், சமீபத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக உணவகங்கள் மூடப்பட்டதால் ஆசீர்வாதத்தின் வேலை பறிபோனது. வருமானத்தை இழந்த இந்த முதிய தம்பதியினர், அன்றாட உணவிற்கே வழியில்லாமல் வறுமையின் பிடியில் கடுமையாகத் தவித்து வந்துள்ளனர்.
ஏக்கத்துடன் உடலை வீசிய கணவன்:
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த பாக்யலட்சுமி திடீரென உயிரிழந்தார். துணையிழந்த சோகத்தில் இருந்த ஆசீர்வாதத்திற்கு, மனைவியின் இறுதிச்சடங்குகளைச் செய்யக்கூட கையில் ஒரு ரூபாய் கூட இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அவர், வேறு வழியின்றி பாக்யலட்சுமியின் உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, சாலையோரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் ஆசீர்வாதத்தைக் பிடித்து விசாரித்தபோது, அவர் கண்ணீருடன் அளித்த வாக்குமூலம் அனைவரையும் உலுக்கியுள்ளது. “என்னிடம் இறுதிச்சடங்கு செய்யப் பணம் இல்லை. யாராவது நல்ல உள்ளம் படைத்தவர்கள் இந்த மூட்டையைப் பார்த்து, என் மனைவியின் உடலை நல்லபடியாக அடக்கம் செய்து விடுவார்கள் என்ற ஒரே ஒரு ஏக்கத்தில்தான் நான் இதைச் செய்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.
நெஞ்சை உருக்கிய துயரம்:
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் போலீசார், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பாக்யலட்சுமியின் உடலை அவருடைய மகளிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10 பிள்ளைகள் இருந்தும் ஒரு தாய்க்கு நேர்ந்த இந்த அவலமும், ஏழ்மையின் கொடூர முகமும் அப்பகுதி பொதுமக்களின் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது.