‘கரூரில் நடந்தது சதியல்ல.. விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்’ டிடிவி தினகரன் பேச்சு

TTV Dhinakaran On karur Stampede : கரூரில் நடந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்றும் இந்த சம்பவம் சதியல்ல என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தவெகவுக்கு வக்கீல் போல் வாதாடி வருகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.

கரூரில் நடந்தது சதியல்ல.. விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் டிடிவி தினகரன் பேச்சு

டிடிவி தினகரன்

Updated On: 

05 Oct 2025 07:19 AM

 IST

சென்னை, அக்டோபர் 05 : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்றும் கரூரில் நடந்த சம்பவம் சதியல்ல. விபத்து தான் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். அவரது வீடியோ தவறாக இருந்தது. மேலும் அவரது அனுபவமின்மையை மட்டுமே காட்டியது. பழி தன் மீது விழுமோ என்று அவர் பயந்திருக்கலாம். இதனால் அதுபோன்று வீடியோவில் விஜய் பேசியுள்ளார். சம்பவம் நடந்த முதல் நாளில் இருந்தே, கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் சரியான முறையில் கையாண்டு வருகிறார். பல்வேறு தரப்பினரின் அழுத்தத்தால் விஜய் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், முதல்வர் ஸ்டாலின் சமநிலையுடனும் பொறுப்புடனும் செயல்பட்டார்.

’தவெக வக்கீல் எடப்பாடி பழனிசாமி’

இது அவரது அரசியல் அனுபவத்தை காட்டுகிறது. கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஒரு விபத்து. சதியல்ல. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சதித் திட்டம் இருப்பதாக குற்றச்சாட்டுகிறார். பழனிசாமி அரசியல் ஆதாயங்களுக்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். இச்சம்பவத்தில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதில்கூட, ஒரு நெருங்கிய நண்பனாக எனக்கு வருத்தம் உள்ளது.

Also Read : பெரியார் உலகம்… திமுக சார்பில் ரூ.1.50 கோடி கொடுக்கிறோம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எனக்கு இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் அவரிடம் பேசவில்லை. அவர் இருக்கும் பொறுப்பிற்கு அவர் அவ்வாறு பேசியது எனக்கு வருத்தமளிக்கிறது. பாஜக இந்த விவகாரத்தை அரசியலாக்குவது வருந்தத்தக்கது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அத்தகைய குழு அனுப்பப்படவில்லை. ஆடு நனையுதேனு ஓநாய் அழுவது போல தவெகவுக்கு வக்கீல் போல் வாதாடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

வீடு பத்திக்கிட்டு எரியும்போது சுருட்டுக்கு நெருப்பை கேட்ட மாதிரி, இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கணக்கை பேசிட்டு இருக்காரு. ராமசாமியோ குப்புசாமியோ என எடப்பாடியை தவிர யார் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு என் ஆதரவு உண்டு. பொதுச்செயலாளர் பதவிக்காக அடிப்படை சட்டத்தையே மாற்றியவர் பழனிசாமி. இப்போது உள்ளது ADMK இல்லை, EDMK. எப்படியாவது அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என தலைகீழ நின்றாலும் இந்த முறை எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தாமல் அமமுக ஓயாது” என்று கூறினார்.

Also Read : அது உண்மையில்ல…. வதந்தி – விஜய் குறித்து வெளியான தகவல் – உள்துறை அமைச்சகம் விளக்கம்

2025 செப்டம்பர் 27ஆம் கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரையில்  20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்தனர். விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி அஸ்ராக் கார்க் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.