3 வயது சிறுவனின் கைகளை கட்டிப்போட்டு தாக்குதல்.. திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளியில் அரங்கேறிய ஷாக் சம்பவம்..
Crime: மூன்று வயதே ஆன பச்சிளம் குழந்தையின் கைகளைக் கயிற்றால் கட்டிப்போட்டு தாக்கியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய பள்ளியிலேயே இத்தகைய சம்பவம் நடந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 19, 2026: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தனியார் பள்ளியில் படிக்கும் 3 வயது சிறுவனின் கைகளை கயிற்றால் கட்டிப்போட்டு ஆசிரியையும் பெண் உதவியாளரும் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பெண் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான ஆசிரியை தேடப்பட்டு வருகிறார்.
பள்ளி முடிந்து வந்த சிறுவனின் உடலில் காயங்கள்
திருத்துறைப்பூண்டி கச்சேரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (33). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது 3 வயது மகன் சர்வின், திருத்துறைப்பூண்டி – திருவாரூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீ-கேஜி படித்து வருகிறார்.
மேலும் படிக்க: “புரிதல் இல்லையா? திட்டமிட்ட தவறா?”.. தீபத்தூண் விவகாரத்தில் தமிழக அரசு மீது கொதித்தெழுந்த அண்ணாமலை!!
இந்நிலையில், வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் சர்வினின் முகம் மற்றும் உடலில் காயங்கள் இருந்துள்ளன. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனிடம் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர். அப்போது, பள்ளியில் ஆசிரியையும் பெண் உதவியாளரும் தன்னைத் தாக்கியதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி காட்சியில் பதிவான அதிர்ச்சி சம்பவம்
இதையடுத்து மறுநாள் பள்ளிக்குச் சென்ற சிறுவனின் தந்தை கோபிநாத், ஆசிரியர் மற்றும் பெண் உதவியாளரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் முறையாகப் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்க்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கோபிநாத் கேட்டுள்ளார். அதன்படி, சிசிடிவி காட்சிகள் அவருக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளன.
அதில், சிறுவன் சர்வினின் கைகளை கயிற்றால் கட்டிப்போட்டு ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் தாக்குவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சிறுவனின் தந்தை அதிர்ச்சியடைந்து பள்ளி வளாகத்திலேயே கதறி அழுதுள்ளார்.
ஆசிரியை மீது வழக்குப்பதிவு.. உதவியாளர் கைது
இதைத்தொடர்ந்து, கோபிநாத் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுவனைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியை பாக்கியலட்சுமி (26), நாகை மாவட்டம் கொளப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், பெண் உதவியாளர் செல்வி (55), திருத்துறைப்பூண்டி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் படிக்க: “சென்னையில் வாகனச் சோதனையில் சிக்கிய மெகா கடத்தல்!”.. ரூ.140 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது; இருவர் கைது!
இருவர் மீதும் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சம்பந்தப்பட்ட இருவரும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண் உதவியாளர் செல்வியை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஆசிரியை பாக்கியலட்சுமியைத் தேடி வருகின்றனர்.
பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி
மூன்று வயதே ஆன பச்சிளம் குழந்தையின் கைகளைக் கயிற்றால் கட்டிப்போட்டு தாக்கியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய பள்ளியிலேயே இத்தகைய சம்பவம் நடந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.