இனி காவல் நிலையங்களுக்கு அலைய வேண்டியதில்லை.. “மொபைலில் புகார்.. உடனே e-CSR எண்!”.. டிஜிபி வெளியிட்ட அறிவிப்பு!
TN Police Launches Automatic e-CSR Portal: காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று சிஎஸ்ஆர் (CSR) பெற அலைவதைத் தவிர்க்கும் வகையில், தானியங்கி 'இசிஎஸ்ஆர்' (e-CSR) ஆன்லைன் சேவையை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்துள்ளார். police.tn.gov.in இணையதளம் மூலம் எளிதாகப் புகார் பதிவு செய்து ஒப்புகை எண்ணைப் பெறலாம்.
சென்னை, நவ.19: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களுக்கான காவல்துறை சேவைகளை நவீனமயமாக்கும் முயற்சியில் பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுநாள் வரை ஏதேனும் ஒரு சம்பவம் தொடர்பாகப் புகார் அளிக்க வேண்டுமென்றால் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று, பின்னர் சிஎஸ்ஆர் (CSR) நகல் பெறுவதற்காக அடுத்தடுத்த நாட்களில் அலைந்து திரிய வேண்டிய நிலை இருந்து வந்தது. சிஎஸ்ஆர் கிடைப்பதில் ஏற்படும் தாமதங்களால் பொதுமக்களுக்கு உண்டாகும் சிரமங்கள் மற்றும் அதிருப்திகளைக் களையும் விதமாக, சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில் எலக்ட்ரானிக் கம்யூனிட்டி சர்வீஸ் ரெஜிஸ்டர் (e-CSR) வசதியை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்துள்ளார்.
இதையும் படிக்க: தூத்துக்குடியில் கூகுள் பே வால் ஏற்பட்ட தகராறு.. விலக்கி விட சென்ற பால் பண்ணை உரிமையாள் கொலை.. ஒருவர் கைது!
இணையதளம் மூலம் புகார் பதிவு:
பொதுமக்கள் தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.police.tn.gov.in என்ற பக்கத்திற்குச் சென்று, அதில் உள்ள ‘ரெஜிஸ்டர் கம்ளைன்ட் – eCSR’ என்ற வசதியைத் தேர்வு செய்து தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம். புகார் விவரங்களைச் செல்போன் எண்ணுடன் பதிவு செய்த உடனேயே, அது தானாகவே e-CSR ஆகப் பதிவாகி, தனித்துவமான e-CSR எண்ணுடன் கூடிய ஒப்புகை எஸ்எம்எஸ் (SMS) புகார்தாரரின் செல்போனுக்கு அனுப்பப்படும். எந்தக் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்று தெரியாத புகார்கள் மாவட்ட மாடரேட்டருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து உரிய காவல் நிலையத்திற்கு மாற்றப்படும்.
இரண்டு நாட்களுக்குள் ஆவணங்கள்:
மேல் நடவடிக்கைக்காகப் புகார்தாரர் இரண்டு நாட்களுக்குள் தேவையான ஆதார ஆவணங்களுடன் எந்தக் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்ற விவரம் மற்றொரு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் விசாரணையை மேற்கொண்டு, வழக்கமான சிஎஸ்ஆர் பதிவு செய்தல், முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தல் அல்லது உரிய காரணங்களுடன் புகாரை முடித்து வைத்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளை எடுக்கும். புகார் மீதான நிலைவரத்தை இணையதளத்தின் சிட்டிசன் போர்ட்டலில் தெரிந்து கொள்ளலாம் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் புகார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அனைத்து e-CSR செயல்பாடுகளும் பிரத்தியேக டேஷ்போர்ட் மூலம் உயர் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு.. வெளிவராத பல ரகசியங்கள்.. நிஷாந்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு தாக்கல்!
அவசர உதவி எண்கள் குறித்த வழிகாட்டுதல்:
ஒவ்வொரு குடிமகனும் காவல்துறையை எளிதாக அணுக வேண்டும் என்பதும், சிஎஸ்ஆர் கிடைக்கவில்லை என்ற குறைபாட்டை நீக்கி அமைப்பை வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும் என்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புகார்கள் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதை உறுதி செய்வோம் என டிஜிபி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், e-CSR என்பது அவசரகால சேவைக்கானது அல்ல என்றும், அவசர உதவிக்கு 100 அல்லது 112 என்ற எண்ணையும், பெண்கள் அவசர உதவிக்கு 1091 என்ற எண்ணையும் உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.