AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தூத்துக்குடியை கலக்கும் ப்ளூ டீ: ஆரோக்கிய சங்குப்பூ தேநீரின் அசுர வளர்ச்சி!

Thoothukudi's Blue Tea: தூத்துக்குடியில் பால் தேநீருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூலிகைகள் நிறைந்த 'சங்குப்பூ தேநீர்' தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. காய்ந்த சங்குப்பூக்களுடன் இஞ்சி, ஏலக்காய், பட்டை போன்ற இயற்கை பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த நீல நிற தேநீர், உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தருகிறது.

தூத்துக்குடியை கலக்கும் ப்ளூ டீ: ஆரோக்கிய சங்குப்பூ தேநீரின் அசுர வளர்ச்சி!
சங்குப்பூ தேநீர்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 05 Jun 2026 16:01 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் வழக்கமாக பால் சேர்த்து தயாரிக்கப்படும் தேநீர் கடைகளே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் மாறான ஒரு புதுமையான பானம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அங்குள்ள ஒரு தேநீர் கடையில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் ‘சங்குப்பூ டீ’ (Butterfly Pea Tea) எனப்படும் நீல நிற மூலிகை தேநீர், ஆரோக்கிய விரும்பிகளின் புதிய விருப்பமாக மாறியுள்ளது. முற்றிலும் இயற்கையான முறையில், பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்த மூலிகைகளைத் தாங்கி வெளிவரும் இந்த பானம், உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி வெளியூர் பயணிகளையும் தூத்துக்குடியை நோக்கி ஈர்த்து வருகிறது.

பாரம்பரிய மூலிகைகளின் தனித்துவமான தயாரிப்பு முறை

இந்த நீல நிற தேநீரின் சுவை மற்றும் மருத்துவக் குணத்திற்கு அதன் பிரத்யேக தயாரிப்பு முறையே முக்கியக் காரணமாகும். காய்ந்த சங்குப்பூக்களுடன் உடலுக்கு நன்மை பயக்கும் இஞ்சி, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு போன்ற வாசனை மிகுந்த இயற்கை மூலிகைப் பொருட்கள் சேர்க்கப்பட்டு இந்த தேநீர் தயார் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, இதில் சர்க்கரை அல்லது தேன் கலந்து இருவேறு சுவைகளில் தனித்துவமாக வழங்கப்படுகிறது. இந்த மூலிகைகளின் கலவையானது உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியையும், உடனடி ஆற்றலையும் தருவதாக இதனை அருந்துபவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

அதிகரிக்கும் வியாபாரமும் அண்டை மாவட்ட வாடிக்கையாளர்களும்

கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாக இந்த தேநீர் கடையை நடத்தி வரும் அதன் உரிமையாளர் சபிஷ், இப்பாணத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடுகிறார். ஆரம்ப காலகட்டங்களில் ஆன்லைன் வாயிலாக சங்குப்பூக்களை ஆர்டர் செய்து வந்த இவர், தற்போது உள்ளூர் சந்தைகளிலேயே நேரடியாகக் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளார். சந்தையில் 200 முதல் 250 கிராம் வரையிலான சங்குப்பூக்கள் சுமார் 300 ரூபாய்க்கு வாங்கப்படுகின்றன. இந்த அளவைக் கொண்டு கிட்டத்தட்ட 100 கோப்பை தேநீர் தயாரிக்க முடிகிறது. ஒரு கப் சங்குப்பூ தேநீர் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில் நாளொன்றுக்கு 50 முதல் 60 கப் வரையிலும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதைவிடக் கூடுதல் எண்ணிக்கையிலும் விற்பனையாவதாக அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்.

Also Read: குற்றாலம்: அருவியில் குளிக்க வந்தவர்களுக்கு ஷாக்… தொடரும் தடை!

ஆரோக்கியப் பாதையில் காலை நடைப்பயிற்சியாளர்கள்

நவீன வாழ்வியலில் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த சங்குப்பூ தேநீர் ஒரு சிறந்த மாற்றாக அமைந்துள்ளது. குறிப்பாக, அதிகாலையில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் தங்களது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்த மூலிகை பானத்தை தேடி வந்து அருந்துகின்றனர். இரசாயனக் கலப்புகள் இல்லாத, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் இந்த ஆரோக்கிய பானம், தூத்துக்குடி நகர எல்லையைத் தாண்டி ஒரு புதிய உணவுமுறைப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என்பதில் ஐயமில்லை.

Follow Us