AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருவண்ணாமலை தீபத் திருவிழா.. பரணி தீபம் மற்றும் மகா தீபம் காண ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்.. முழு விவரம்!!

Thiruvannamalai Maha Deepam Festival: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, பரணி தீபம் மற்றும் மகாதீபத்தைக் காணும் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை முதல்முறையாக இலவச அனுமதி வழங்கி உள்ளது. ஆன்லைன் மூலம் 3,000 பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தீபத் திருவிழா.. பரணி தீபம் மற்றும் மகா தீபம் காண ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்.. முழு விவரம்!!
திருவண்ணாமலை கோயில்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 18 Nov 2026 07:10 AM IST

திருவண்ணாமலை, நவ.18: உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்களின் பக்திப் பரவசத்திற்கு மத்தியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டும் திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 2,668 அடி உயர மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதை நேரில் கண்டு கழிக்க உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவது வழக்கம். இந்த ஆண்டு விழாவைக் காணவரும் பக்தர்களுக்குத் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கார்த்திகை மாதம்: தீபம் முதல் சோமவாரம் வரை முக்கிய நாட்கள் இதோ!

முதல்முறையாக இலவச தரிசன முறை அறிமுகம்:

கடந்த காலங்களில் தீபத் தரிசனம் காணக் கட்டண முறைகள் நடைமுறையில் இருந்த நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பரணிதீபம் மற்றும் மகாதீபத் தரிசனத்தைக் காணும் பக்தர்களுக்கு முற்றிலும் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டண முறை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு, பொதுமக்கள் எளிதில் கலந்துகொள்ளும் வகையில் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தம் 3,000 பக்தர்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக முன்பதிவு செய்து தீபத் தரிசனக் காண அனுமதி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (நவ.18) காலை 11 மணி முதல் நவ.20ம் தேதி மாலை 3 மணி வரை முன்பதிவு செய்யலாம்.

பக்தர்களுக்கான டிக்கெட் ஒதுக்கீட்டு விவரங்கள்:

அனைத்து பக்தர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த 3,000 இலவச டிக்கெட்டுகள் முறையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பரணி தீபத்தைக் காண திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் 500 பேரும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 500 பக்தர்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இதேபோன்று, மகா தீபத்தினைக் காண திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் 1,000 பேரும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 பேரும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது ஆதார் எண்ணை  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) சரிபார்ப்பு மூலமாக இந்த இலவச அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நவ.20ம் தேத மாலை 4 மணிக்கு கணினி மூலம் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் டிக்கெட் அனுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மாலையிடும் ஐயப்ப பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது?

கடந்த ஆண்டு இருந்த கட்டண முறை ரத்து:

கடந்த ஆண்டு பரணிதீபம் மற்றும் மகாதீப தரிசனத்திற்கு ரூ.500 முதல் 600 வரை கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த முறை அந்த முறை மாற்றப்பட்டு முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது ஆன்மீகப் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எளிய மக்களும் எந்தவிதக் கட்டணச் சுமையுமின்றி அண்ணாமலையார் தீபத்தைத் நேரில் தரிசிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள இந்த அதிரடி ஏற்பாடு, பக்தர்களுக்கு ஆன்மீக ரீதியில் மிகப்பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து பக்தர்கள் தங்களது பதிவுகளைத் தொடங்கலாம்.

Follow Us