சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்.. உரிமையாளர்களுக்கு அபராதம் முதல் ஏலம் வரை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
Madras High Court Strict Order: சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம், வழக்குப்பதிவு மற்றும் யாரும் உரிமை கோராவிட்டால் ஏலம் விடப்படும் என்றும் உடனடியாக இந்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சென்னை, நவ.18: தமிழகத்தின் பல்வேறு ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவது தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் விபத்துகளைச் சந்திப்பதோடு, பல விலைமதிப்பற்ற உயிர்களும் பறிபோகும் துயரச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் ஏற்பட்டு வரும் கடுமையான இடையூறுகளைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க: கடன் பிரச்னை, ஆடம்பர வாழ்க்கைக்காக தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளை! யூடியூபர் நிஷாந்த் குறித்து காவல் ஆணையர் பரபரப்பு தகவல்
உரிமையாளர்களுக்கு அபராதம், வழக்குப்பதிவு:
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கியச் சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் கால்நடைகளைத் தடையின்றித் சுற்றித்திரிய விடும் உரிமையாளர்களைக் குறிவைத்துத் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சாலைகளில் மாடு மற்றும் இதர கால்நடைகளை திரியவிடும் உரிமையாளர்களுக்கு உடனடியாக கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, பொதுமக்களின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் கால்நடைகளை பராமரிப்பின்றி தெருக்களில் விடும் நபர்கள் மீது காவல் துறையினர் உரிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.
கால்நடைகளை ஏலம் விடும் நடைமுறை:
சாலையில் சுற்றித் திரிந்து பிடித்துச் செல்லப்படும் கால்நடைகளுக்கு உரிய காலத்தில் யாருமே வந்து உரிமை கோராத பட்சத்தில், அவற்றுக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, உரிய ஆவணங்களுடன் உரிமையாளர்கள் வந்து அபராதம் செலுத்திப் பெற்றுக்கொள்ளாத கால்நடைகளை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் பொது ஏலம் விடலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மூலம் கால்நடைகளைப் பொதுவெளியில் அவிழ்த்துவிடும் உரிமையாளர்களின் அலட்சியப் போக்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: திருமண நாளில் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டம்.. தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை வெளியீடு..
நகராட்சி, பஞ்சாயத்துகள்ளுக்கும் 4 வார கெடு:
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த முக்கியமான உத்தரவானது வெறும் ஒரு சில மாநகராட்சிகளுடன் நின்றுவிடாமல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமப் பஞ்சாயத்துகள் என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முழுமையாகப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாகச் செயல்படுத்தும் விதமாகத் தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் அடுத்த 4 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்பைப் பெற்றுள்ளது.