போலீஸ் ராஜ்ஜியமா நடக்கிறது? சிறுவன் கடந்த வழக்கு – நீதிமன்றம் கேள்வி
HC Slams Probe in Kidnap Case : திருவள்ளூர் மாவட்டத்தில் தனுஷ் – விஜயஸ்ரீ காதல் விவகாரத்துடன் தொடர்புடைய சிறுவன் கடத்தல் வழக்கில், முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணையில் முன்னேற்றமில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளது.

தனுஷ் – விஜயஸ்ரீ காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) தள்ளுபடி செய்துள்ளது. விசாரணையில் முன்னேற்றம் இல்லாததை சுட்டிக்காட்டிய நீதிபதி, இது போலீஸ் ராஜ்யத்தை நினைவூட்டுவதாக கடும் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். திருவள்ளூர் (Tiruvallur) மாவட்டம் கலம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞருக்கு, தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தை விஜயஸ்ரீயின் பெற்றோர் ஏற்கவில்லை.
இதனையடுத்து, பெண்ணைத் தேடி தனுஷின் வீட்டுக்குச் சென்ற அவரது பெற்றோர் சென்றிருக்கின்றனர். அந்த நேரம் தனுஷ் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் தனுஷின் தம்பியை கடத்தியதாக புகார் எழுந்தது. கடத்திய சிறுவனை அவர்கள் இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு சென்றனர். இதனையடுத்து தனுஷின் தாயார் அளித்த புகாரின் பேரில், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் மற்றும் கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிக்க : புதுக்கோட்டையில் இரட்டை கொலை.. உயிரிழந்த சகோதரர்கள்.. நடந்தது என்ன?




ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வானராஜ், மணிகண்டன், கணேசன் ஆகிய மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், “இன்னும் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், தற்போது ஜாமீன் வழங்குவது விசாரணையை பாதிக்கும்,” என தெரிவித்து ஜாமீனை தள்ளுபடி செய்தார்.
இதையும் படிக்க : உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து டயட்டில் இருந்த மாணவர் பலி .. சோக சம்பவம்!
நீதிபதி கடும் விமர்சனம்
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டாலும், இதுவரை போதுமான முன்னேற்றம் எதுவும் இல்லை. போலீசார் தாக்கல் செய்த அறிக்கைகள் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இது அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கான ஒரு எடுத்துக்காட்டு என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் உயரதிகாரி, ஒரு அரசியல் கட்சியின் தலைவரும் உள்ளனர். இது போன்ற சம்பவங்கள் நாட்டில் பொதுமக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பைப் பற்றி கேள்விகள் எழுப்புகிறது. நாடு போலீஸ் ராஜ்யத்திற்கே செல்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது,” என நீதிபதி நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். நீதிபதியின் கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது. இதனையடுத்து உரிய விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என அரசிடம் மக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.