Tenkasi: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் திருட்டு.. தலைமை அர்ச்சகர் தலைமறைவு!
Tenkasi Kasi Viswanathar Temple: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பாபிஷேகத்தின் போது பக்தர்கள் அளித்த வெள்ளி வாளி, பித்தளை குடம் போன்ற பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
தென்காசி, செப்டம்பர் 18: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ரூ.2லட்சம் மதிப்புள்ள பல்வேறு வகையான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தலைமை அர்ச்சகர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அம்மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் மாவட்டங்களில் ஒன்றான தென்காசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் செயல்பட்டு வருகிறது. உத்திர பிரதேசத்தில் கங்கையாற்றின் கரையில் அமைந்துள்ள புனித தலமாக அறியப்படும் காசிக்கு இணையான கோயில் என்பதால் இங்கு உள்ளூர் முதல் உலகம் வரையிலான பல்வேறு தரப்பட்ட பக்தர்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
பொருட்களை காணவில்லை என புகார்
இப்படியான நிலையில் இந்த கோயிலில் செயல் அலுவலராக பணியாற்றி வரும் பொன்னி என்பவர் தென்காசி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக சில்வர் வாளி, பித்தளை குடம், எவர் சில்வர் கரண்டி, பிரசாதம் வைக்கும் பை, சால்வை ஆகியவற்றை பக்தர்கள் உபயமாக வழங்கினர்.
Also Read: பசை தடவி ஏடிஎம் மிஷினில் கொள்ளை.. ஓசூரில் சிக்கிய வடமாநில கும்பல்!
இவை அனைத்தும் அம்மன் சன்னதியின் மடப்பள்ளியில் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கடந்த 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி எதேச்சையாக மடப்பள்ளியை ஆய்வு செய்தபோது அறையில் வைக்கப்பட்ட பொருட்களை காணவில்லை. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த நிலையில் கோயிலில் தற்காலிக அர்ச்சகராக பணிபுரியும் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நடன சபாபதி, பக்தர்களாக வருகை தரும் தென்காசி ஒப்பனை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஹரி, சம்பா தெருவை சேர்ந்த தினேஷ், கீழப்புலியூர் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் ஆகியோர் பெரிய அட்டை பெட்டிகளில் மற்றும் சாக்கு பைகளில் பொருட்களை தெற்கு வாசல் வழியாக ஆட்டோவில் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
Also Read: ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது விபரீதம்.. நூலிழையில் முதியவரை காப்பாற்றிய போலீஸ்.. குவியம் பாராட்டு
தலைமையாக செயல்பட்ட மூத்த அர்ச்சகர்
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடன சபாபதி மற்றும் ஹரி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்கள் அளித்த தகவலில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி வரும் மேலகரம் கிராமம் அக்ரஹார தெருவை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் பட்டர் கூறியதன் பேரில் தான் அவரது வீட்டுக்கு பொருள்களை எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காணாமல் போன பித்தளைக் குடங்கள், கரண்டிகள், சில்வர் வாளிகள், இரண்டு பெட்டி சால்வைகள், பிரசாத பைகள் ஆகியவற்றின் மதிப்பு மொத்தம் ரூ.2 லட்சமாகும்.
எனவே பொருட்களை திருடி சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இது குறித்து காவல் சார்பாளர் முருகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் ஹரி, தினேஷ் மற்றும் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்காலிக அர்ச்சகரான நடன சபாபதி மற்றும் தலைமை அர்ச்சகரான செந்தில் ஆறுமுகம் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.