AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டாஸ்மாக் காலி பாட்டில் திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரங்கள் அறிமுகம் – எப்படி வேலை செய்யும்?

டாஸ்மாக் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தானியங்கி இயந்திரங்களை நிறுவும் புதிய முன்னெடுப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தானியங்கி பாட்டில் திரும்பப் பெறும் இயந்திரங்கள் சோதனை முறையில் நிறுவப்பட்டுள்ளன .

டாஸ்மாக் காலி பாட்டில் திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரங்கள் அறிமுகம்  – எப்படி வேலை செய்யும்?
காலி பாட்டில் திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரங்கள்
Baskar P
Baskar P | Updated On: 12 Jun 2026 22:17 PM IST

சென்னை, ஜூன் 12 : தமிழகத்தில் மதுபானக் காலி பாட்டில்கள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் நீர்நிலைகளிலும், பொது இடங்களிலும் வீசப்படுவது நீண்டகாலமாக சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வந்தது. இதனைத் தடுப்பதற்கும், பாட்டில்களை முறையாக மறுசுழற்சி செய்வதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட உறுதியின்படி, டாஸ்மாக் மதுபானக் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தானியங்கி இயந்திரங்களை நிறுவும் புதிய முன்னெடுப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் காலி பாட்டில் திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரங்கள் அறிமுகம்

இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய சென்னை மாவட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் தானியங்கி பாட்டில் திரும்பப் பெறும் இயந்திரங்கள் சோதனை முறையில் நிறுவப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் ‘reklaim Ace’ என்ற நவீனத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது பாட்டில்களைத் துல்லியமாக அடையாளம் காணவும், தரம் பிரிக்கவும் உதவுகிறது. இதன் மூலம், போலி பாட்டில்கள் அல்லது இதர கழிவுகள் இயந்திரத்திற்குள் செல்வது தடுக்கப்படுகிறது. நுகர்வோர் எளிதில் பயன்படுத்தும் வகையில் இந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பயனாளர்கள் முதலில் இயந்திரத்தில் உள்ள ஸ்கேனரில் தங்கள் UPI QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும் அல்லது தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

அடுத்து, காலி பாட்டிலில் உள்ள QR குறியீட்டை இயந்திரத்தின் ஸ்கேனரில் காட்ட வேண்டும். பின், பாட்டிலை இயந்திரத்தின் துவாரத்தில் போட வேண்டும். பாட்டிலைச் செலுத்திய பிறகு, திரையில் உள்ள ‘Finish & Claim’ என்ற பொத்தானை அழுத்தினால், அந்த பாட்டிலுக்கான குறிப்பிட்ட தொகை நேரடியாகப் பயனாளரின் டிஜிட்டல் கணக்கிற்கு வந்து சேரும்.

“Return, Earn, Recycle – For A Sustainable Tomorrow” என்ற முழக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மதுபானக் காலி பாட்டில்கள் சாலை ஓரங்களிலும், நீர்நிலைகளிலும் வீசப்படுவதைத் தடுத்து, அவற்றைச் சேகரித்து முறையாக மறுசுழற்சி செய்வதன் மூலம் நிலம் மற்றும் நீர் மாசடைவதைத் தடுக்கப்படும்.

டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மூலம் பாட்டில்களைத் திரும்பக் கொடுப்பவர்களுக்கு உடனுக்குடன் பணம் வழங்குவதால், பணப்பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. மக்களிடையே பாட்டில்களை வீணாக எறியாமல், அவற்றை ஒரு பொருளாகக் கருதி திரும்ப ஒப்படைக்கும் பொறுப்புணர்வையும், மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல். தற்போது சென்னை அம்பத்தூரில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சோதனை முயற்சி, ஒரு முன்னோடித் திட்டமாகும். இந்த இயந்திரங்களின் செயல்பாடு, மக்களின் பங்களிப்பு மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவை முறையாகக் கண்காணிக்கப்படும்.

இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இந்த இயந்திரங்களைப் படிப்படியாக விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, தமிழகத்தின் பொது இடங்களில் பாட்டில் கழிவுகள் பெருமளவு குறையும் என்றும், மறுசுழற்சித் துறை மேம்படும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தமிழக அரசின் இந்த நவீன முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Follow Us