சுட்டெரிக்கும் வெயில் எச்சரிக்கை: வெப்பநிலை மேலும் உயரும்!
Tamil Nadu Rain Alert: கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் கொத்தவாச்சேரியில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை பதிவாகியுள்ள நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 21 வரை தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 16 முதல் 18 வரை தேனி, ராமநாதபுரம், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஒருசில பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, காரைக்கால் பகுதியில் மிக லேசான மழையும், கடலூர் மாவட்டத்தின் கொத்தவாச்சேரி பகுதியில் அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து வேப்பூர், சேத்தியாத்தோப்பு மற்றும் குறிஞ்சிப்பாடி ஆகிய இடங்களில் தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தமட்டில், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துக் காணப்பட்டது. நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 39.9 டிகிரி செல்சியஸும், சமவெளிப்பகுதியில் குறைந்தபட்சமாக தர்மபுரியில் 22.5 டிகிரி செல்சியஸும், மலைப்பகுதியான உதகமண்டலத்தில் 12.6 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
அடுத்த இரு தினங்களுக்கான இடி, மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 15 மற்றும் ஜூன் 16 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 15-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா பகுதிகள், தெற்கு தமிழகம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 16 அன்று இதே வேகத்தில் காற்று வீசுவதுடன், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மிதமான மழை தொடரக்கூடும். மேலும், தேனி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 17 முதல் ஜூன் 21 வரையிலான வாராந்திர வானிலை முன்னறிவிப்பு
ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும். குறிப்பாக ராமநாதபுரம், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 19-ஆம் தேதி பலத்த காற்றுடன் கூடிய லேசான மழையும், ஜூன் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைப்பொழிவும் நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வெப்பநிலை மாறுபாடுகள் குறித்த முன்னறிவிப்பு
ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றாலும், ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை சற்று உயரக்கூடும். அதன் பிறகு, ஜூன் 17 முதல் 19 வரையிலான நாட்களில் வெப்பநிலையானது பொதுவாக பெரிய மாற்றங்களின்றி இயல்பு நிலையை ஒட்டியே காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை நிலவரம்
தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜூன் 15 மற்றும் 16 ஆகிய இரு தினங்களுக்கும் வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இந்த நாட்களில் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான பலத்த காற்று மற்றும் சூறாவளி எச்சரிக்கை
ஜூன் 15 முதல் 18 வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதேபோல், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் 15 முதல் 18 வரை மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதே வேளையில், அரபிக்கடல் பகுதிகளுக்கு எந்தவொரு எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.