Tamil Nadu Weather forecast: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்!!
Tamil Nadu Weather Today: அதனைத்தொடர்ந்து, அக்.14ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக்.15ம் தேதி தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம். அக்.16ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, அக்.11: தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழகக் கடலோரப் பகுதிகளின் மேல், சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. இந்தச் சுழற்சியிலிருந்து உள் தமிழகம், உள் கர்நாடகா வழியாக வடக்கு மத்திய மகாராஷ்டிரா வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நீடிக்கிறது. இதன் காரணமாக அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஆந்திரா செல்லும் முதல்வர் விஜய் – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணை சந்திக்க திட்டம் – என்ன காரணம்?
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (அக்.11) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற இடங்களில் லேசான மழைக்கே வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் மழை நிலவரம்:
தொடர்ந்து நாளை (அக்.12) நீலகிரி, கோவை, ஈரோடு, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை மறுநாள் (அக்.13) அன்று மழை மேலும் குறைந்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, அக்.14ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அக்.15ம் தேதி தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம்.
அக்.16ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுடன், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களான கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:
இன்று முதல் அக்.14ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். வடக்கு உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதையும் படிக்க : இடைத்தேர்தல் முடிவுகள்.. மு.க.ஸ்டாலின் இப்படியே இருங்க விளங்கிடும்.. மாணிக்கம் தாகூர் அதிரடி அட்டாக்..
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.