Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தொடர் விடுமுறை.. ஆம்னி பேருந்துகளுக்கு பறந்த உத்தரவு.. போக்குவரத்து கழகம் நடவடிக்கை

Omni Buses Fare Hike : ஓணம், மிலாடி நிபி, வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை இருக்கிறது. இதனால், சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்கும் நேரத்தில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர் விடுமுறை.. ஆம்னி பேருந்துகளுக்கு பறந்த உத்தரவு.. போக்குவரத்து கழகம் நடவடிக்கை
ஆம்னி பேருந்துகள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 05 Sep 2025 06:14 AM IST

சென்னை, செப்டம்பர் 05 :  தொடர் விடுமுறையையொட்டி, ஆம்னி பேருந்து அதிக கட்டணம் (Omni Buses) வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அதிக கட்டணம் வசூல், அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை நடத்தி அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற நகரங்களில் மக்கள் வேலை நிமித்தமாக வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். இதற்கு பலரும் பேருந்து, ரயில்களில் டிக்கெட் புக் செய்து செல்வார்கள்.

இருப்பினும், லட்சக்கணக்கான சொந்த ஊர்களுக்கு செல்வதால் அவர்களுக்காக தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இப்படியான நேரத்தில், ஆம்னி பேருந்துகளும் அதிக கட்டணத்தை வசூலிக்கின்றன. தற்போது, 2025 செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று ஓணம், மிலாது நபி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து, சனி, ஞாயிறு என வார இறுதி விடுமுறை வருகிறது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணத்தை வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. சென்னையில் தென் மாவட்டங்களுக்கு ரூ.3000 முதல் ரூ.4000 வரை வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

Also Read : தொடர் விடுமுறை.. ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கெல்லாம்?

ஆம்னி பேருந்துகளுக்கு பறந்த உத்தரவு

இந்த நிலையில், தமிழக போக்குவரத்து கழகம் ஆம்னி பேருந்துகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், “மிலாடி நபி (05-09-2025) மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : சென்னையில் வீட்டு நாய்களுக்கு சிப் கட்டாயம்.. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தொடர் விடுமுறையையொட்டி, தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் 2,500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது. கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.