Tamil Nadu News Live Updates: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு
Tamil Nadu Breaking news Today 16 July 2025, Live Updates: திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காணொளி காட்சி வாயிலாக நடக்கும் இந்த கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

தமிழ் செய்திகள்
தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை, வானிலை நிலவரம், போராட்டம், தமிழக அரசின் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் என பல முக்கிய அம்சங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக பாமகவில் (PMK Party) நிலவும் உட்கட்சி விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அண்ணாமலை பல்கலைக்கழக விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட அரசை வலியுறுத்தி, அதிமுக சார்பில் வருகிற ஜூலை 17, 2025 அன்று போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) அடுத்த திட்டங்கள் போன்ற அரசியல் சார்ந்த நிகழ்களை இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் வழங்கவுள்ளோம். அரசின் சேவைகள் மற்றும் நலத்திடங்கள் போன்ற பயனுள்ள தகவல்கள் இந்த பக்கத்தில் கிடைக்கும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை ஜூலை 16, 2025 அன்று திறந்து வைக்கிறார். பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள், பேருந்துகள் குறித்த விவரங்களை இந்த பகுதியில் பார்க்கலாம். மேலும் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) வெளியிடும் முக்கிய அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் வானிலை மாற்றங்கள் கணிக்க முடியாததாக இருக்கிறது. சில இடங்களில் வெயில் கொளுத்தும் நிலையில், ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை குறித்து தகவல்களை இந்தப் பக்கத்தில் உங்களால் தெரிந்துகொள்ள முடியும். அஜித் குமாரின் லாக் அப் மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கியிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. அது தொடர்பான தகவல்களை விரைவாகவும் உண்மைக்கு நெருக்கமாகவும் இந்தப் பக்கத்தில் பார்க்கலாம். குற்றாலத்தின் சாரல் திருவிழா வருகிற 19 ஆம் தேதி துவங்கவிருக்கிறது. அதுகுறித்த அப்டேட்டுகளையும் உங்களுக்கு உடனுக்குடன் வழங்கவுள்ளோம்.
மேலும் தமிழ்நாடு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள க்ளிக் செய்க!
LIVE NEWS & UPDATES
-
DMK: நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 17) நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காணொளி வாயிலாக இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
-
TN Government: இனி கல்லூரி கட்டுமானங்களை பொதுப்பணித்துறையே மேற்கொள்ளும்!
உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை இனிமேல் நேரடியாக பொதுப்பணித்துறையே மேற்கொள்ளும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் இதுவரை கட்டுமான பணிக்காக செயல்பட்டு வந்த தொழில்நுட்ப கல்வி இயக்கம் கலைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டேன் – திருமாவளவன் பேட்டி
பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், என்னை கொச்சைப்படுத்தும் நோக்கில் கே.பி.ராமலிங்கம் பேசுவதாகவும், எனது உணர்ச்சியை தூண்டி, திமுக மீது எதிர்ப்பு மனநிலையை உருவாக்க நினைக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
திருப்போரூர் கோயிலில் வழிபட்ட அன்புமணி – சௌமியா தம்பதியினர்
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி இன்றோடு 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசாமி கோயிலுக்கு அன்புமணி தனது மனைவி சௌமியாவுடன் சென்று வழிபட்டனர். அப்போது சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள வெள்ளி வேலை காணிக்கையாக வழங்கினர்.
-
அரசு பள்ளியில் மேற்கூரை பூச்சு விழுந்து விபத்து – 5 மாணவர்கள் படுகாயம்
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டு அரசு பள்ளியில் மேற்கூரை பூச்சு விழுந்து 6ஆம் வகுப்பு படித்து வந்த 5 குழந்தைகள் படுகாயமடைந்தனர். சமீபத்தில் தான் ரூ.33 லட்சம் செலவில் புதிதாக இந்த சம்பவம் நடந்த கட்டடம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் – அரசிதழில் வெளியீடு
நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவு தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட மசோதா, ஜூலை 8ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More -
கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் வராததால் ஆத்திரம் – பயணிகள் மறியல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் வராததால் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்துள்ளனர். இதனால் சென்னை சென்ட்ரல் மார்க்கமாக செல்லும் ரயிலை மறித்து கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
தென்காசி மாவட்டம் பண்பொழியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. 9 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சளியால் பாதிக்கப்பட்ட 8 மாதக் குழந்தை தைலம் தேய்த்தால் உயிரிழப்பு
சென்னையில் சளியால் பாதிக்கப்பட்ட 8 மாதக் குழந்தைக்கு தைலம் மற்றும் கற்பூரம் அதிக அளவில் தேய்த்ததால் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நலன் சார்ந்த விஷயத்தில் பெற்றோர்கள் மிகுந்த அக்கறையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
ரிதன்யா விவகாரம்: மாதர் சங்கம் பற்றி விமர்சித்த சீமான் மீது போலீசில் புகார்
திருப்பூரில் திருமணமான இரு மாதங்களிலேயே வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரச்னைகளால் தற்கொலை செய்துக் கொண்ட ரிதன்யா விவகாரத்தில் மாதர் சங்கம் பற்றி நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
-
ஒரே நேரத்தில் 10 குட்டிகளை ஈன்ற அனகொண்டா பாம்பு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் அனகொண்டா பாம்பு 10 குட்டிகளை ஒரே நேரத்தில் ஈன்றுள்ளது. இதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவ கண்காணிப்பில் உள்ள அனைத்து குட்டிகளும் விரைவில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (ஜூலை 17) கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை.. நான் எடுப்பதுதான் முடிவு.. இபிஎஸ் திட்டவட்டம்
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொறுத்தவரை நாங்கள் தான் (அதிமுக) தலைமை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றும், கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறவில்லை, எங்கள் கூட்டணியே ஆட்சியமைக்கும் என அவர் தெரிவித்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.
-
அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை.. போலீசார் மீது புகார்
சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகலை தருவதில் தாமதம் செய்வதாக கூறி என தம்பி நவீன் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் திருப்புவனம் காவல்துறையினர் மீது புகார் அளித்துள்ளார்.
-
திருவள்ளுவரை அவமதிக்கும் செயல்.. ஆளுநருக்கு ப.சிதம்பரம் கண்டனம்
காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை ‘திருக்குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் அளித்த விருதில் திருக்குறளில் இல்லாத குறள் இடம் பெற்றிருந்தது சர்ச்சையாகியிருந்தது.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு பயமாக உள்ளது. அதனால் தான் விமர்சனம் என்ற பெயரில் நமக்கு விளம்பரம் செய்கிறார் என மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தனது தேர்தல் பரப்புரை திட்டத்தில் இந்த திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாநிலங்களவை உறுப்பினர்.. நடிகர் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இதனை முன்னிட்டு தனது நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினியை நேரில் சந்தித்த அவர் மாநிலங்களவை உறுப்பினருக்கான சான்றிதழை காட்டி வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
-
முதுநிலை சட்டப்படிப்பு.. மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் 2025 ஜூலை 16ம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு ரூ.500, மற்றவர்களுக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மொத்தம் 260 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு உள்ளூர் விடுமுறை
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஜூலை 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னோர் வழிபாட்டின் மிக முக்கிய நாளாக கடைபிடிக்கப்படும் இந்நாளில் அனைத்து ஊர்களிலும் நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாகும். இந்த நிலையில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.
-
ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற உத்தரவு
கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், அதற்காக எட்டு வாரங்களில் கெடு விதித்தும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வி.கனகசுந்தரம் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
-
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை – டிகேஎஸ் இளங்கோவன்
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் கூட்டணி ஆட்சி தொடர்பான கருத்துகளும் எழுந்துள்ளது. கூட்டணி ஆட்சி என கூறினால் மக்கள் வாக்களிப்பார்களா என்பதும் தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு
தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30ம் தேதி தொடங்கும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கலந்தாய்வில் பங்கேற்க 72,743 பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாகவும், போலி சான்றிதழ் கொடுத்ததாக கண்டறியப்பட்ட 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
-
பாமக 37வது ஆண்டு விழா.. அன்புமணி ராமதாஸின் நெகிழ்ச்சி பதிவு
மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாமகவும் பங்கேற்க வேண்டும். அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட உறுதியேற்போம் என பாமகவின் 37வது ஆண்டு விழாவில் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
-
தமிழக வெற்றிக் கழக இரண்டாவது மாநில மாநாடு தேதி அறிவிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று (ஜூலை 16) மதுரையில் உள்ள கூடக்கோயிலில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் பூமி பூஜை நடைபெற்ற நிலையில் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரையில் பறிபோன குழந்தை உயிர்
தொட்டிலில் கட்டியிருந்த கயிற்றை கழுத்தில் சுற்றி விளையாடி குழந்தைகளை சிரிக்க வைக்க முயற்சித்த தந்தை கயிறு இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் நினைவுதினம்
இந்தியாவையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 21ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2004ம் ஆண்டு இதே நாளின் ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் உயிரிழந்தனர். பல குழந்தைகள் காயமடைந்தனர்.
-
தாயிடம் ஆசிர்வாதம் பெற்ற அன்புமணி
அன்புமணி – ராமதாஸ் இடையே பிரச்னை எழுந்துவரும் நிலையில், அன்புமணி தனது தாய் சரஸ்வதி இடம் ஆசிர்வாதம் பெற்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த சூழலில் தனக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் விரைவில் சரியாகும் என கட்சி நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
-
அன்புமணி குறித்து பேசிய ராமதாஸ்
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கக்கூடிய உட்கட்சி விவகாரம் அடுத்தடுத்த நிலைக்கு சென்றுள்ளது. இந்நிலையில் பிரச்னைகள் விரைவில் முடிவுக்கு வரும் என கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் கூறிய ராமதாஸ், அன்புமணி இடையே இருக்கக்கூடியது பேசி தீர்க்க முடியாத கருத்து வேறுபாடு கிடையாது என குறிப்பிட்டார்
-
தமிழக அரசு வசம் வந்த நிலம்
குத்தகை காலம் முடிந்தும், 1970 ஆம் ஆண்டு முதல் ரேஸ்கோர்ஸ் நிர்வாகம் வாடகை செலுத்தவில்லை என்பது குற்றச்சாட்டாக முன் வைக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ரூபாய் 730 கோடியே 86 லட்சத்தை நிலுவைத் தொகை செலுத்த வேண்டுமென தமிழக அரசு தெரிவித்தது. இல்லை என்றால் அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நிலம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டது.
-
கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலம் வரலாறு
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த இடமானது ஆங்கிலேயர் காலத்தில் குதிரை பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்ட நிலையில் 1945 ஆம் ஆண்டு 99 ஆண்டுகளுக்கு இந்த இடம் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. ஆனால் இத்தனை ஆண்டுகள் வாடகை எதுவும் கொடுக்காமல் பெரும் நிலம் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது
-
கிண்டியில் பசுமை பூங்கா அமைக்க தடை
சென்னை கிண்டியின் ரேஸ் கோர்ஸ் கிரவுண்டில் பசுமை பூங்காவை மேம்படுத்த, இன்னும் நிலம் சென்னை மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்படாத நிலையில், ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏன் ஏரி அமைக்க கூடாது என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
-
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை ரத்து செய்ய சீமான் வலியுறுத்தல்
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் தமிழ் பகுதியில் பாடத்திட்டத்திற்கு வெளியான கடினமான கேள்விகள் இடம்பெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தமிழில் படித்தவர்களை விலக்க திட்டமிட்ட முயற்சி என கண்டனம் தெரிவித்தார். தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தினார்.
-
இன்று முதல் பயன்பாட்டுக்கு திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம்
திருச்சியில் பஞ்சப்பூர் பகுதியில் கட்டப்பட்ட பேருந்து முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. கடந்த 2025 மே 9-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்ட இந்த பேருந்து நிலையம் ரூ.480 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து முனையத்துக்கு ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்’ என பெயரிடப்பட்டுள்ளது
-
Tamil Nadu News Live: சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. வானிலை அலெர்ட்
சென்னையில் இன்று முதல் அதாவது ஜூலை 16 2025 முதல் மழையை எதிர்பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 17 2025 தேதியான நாளை நீலகிரி கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
-
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை பிளான்
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அசைவுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. இந்நிலையில் tvk வின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கான பூமி பூஜை இன்று (ஜூலை 16, 2025) நடத்தப்பட்டது. முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.