Tamil Nadu News Highlights: ஆணவக் கொலை.. போராட்டத்தை அறிவித்த திருமாவளவன்

Tamil Nadu Breaking news Today 03 August 2025, Updates: நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இந்த நிலையில், ஆணவக் கொலைக்கு எதிரகா தனிச்சட்டம் இயற்ற கோரி விசிக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu News Highlights: ஆணவக் கொலை.. போராட்டத்தை அறிவித்த திருமாவளவன்

திருமாவளவன்

Updated On: 

03 Aug 2025 19:11 PM

 IST

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 3, 2025 அன்று ஆடி பதினெட்டாம் பெருக்கு இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனால், அம்மன் கோயில்களில் திரளான பக்தர்கள் சாமி  தரிசனம் செய்தனர்.  இந்த நாளில் எதை துவங்கினாலும் அது பல மடங்காக பெருகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக அன்றைய நாளில் திருமணம், தொழில் ஆகியவற்றை பற்றிய பேச்சுக்களை துவங்குவார்கள். தமிழ்நாட்டில்  நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  மேலும், அடுத்த சில தினங்களுக்கு தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, திருநெல்வேலி, தென்காசி  மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.  கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து,  8 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் 3ஆம் தேதியான இன்று முதல் தேமுதிக பொதுச்செயலாளர், பிரேமலதா விஜயகாந்த், சுற்றுப்பயணத்தை  தொடங்கி உள்ளார். விரைவில் வருகிற 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 2025 ஆகஸ்ட் 3ஆம் தேதியான இன்று ஆடு மேய்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், நெல்லை ஆணவக் கொலையை கண்டித்தும், ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற கோரியும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 03 Aug 2025 06:50 PM (IST)

    மக்களுக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ்

    எனது எழுச்சி பயணத்திற்கு ஆதரவளிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நமது ஆட்சி அமைந்தவுடன், ஸ்டாலின் அரசால் இந்த மக்கள் அடைந்த இன்னல்களை தீர்ப்பது தான் நமது முக்கியமான பணி எனவும் குறிப்பிட்டார்.

  • 03 Aug 2025 06:30 PM (IST)

    தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி

    தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வந்தால் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றும் மகிழ்ச்சி தான் என்றும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், .பன்னீர்செல்வத்திற்கு நல்ல காலம் பிறந்து இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • 03 Aug 2025 06:15 PM (IST)

    ஆணவக் கொலை.. போராட்டத்தை அறிவித்த திருமாவளவன்

    ஆணவக் கொலையை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்றக் கோரி 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் எனது தலைமையிலும், மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

  • 03 Aug 2025 06:00 PM (IST)

    கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்க வேண்டும் – ஓபிஎஸ்

    அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு முன்னாள் முதல்வர் .பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டணி குறித்த முடிவு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தினைக் கேட்டு, கள நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப தக்க நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

  • 03 Aug 2025 05:46 PM (IST)

    ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    வார விடுமுறையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். மழை குறைந்து இதமான வானிலை இருப்பதால், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். அங்கு இருக்கும் தாவரவியல் பூங்காவில் உள்ள வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

  • 03 Aug 2025 05:30 PM (IST)

    26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை தொடரும்

    தமிழகத்தில் இரவு 7 மணி வரை 26 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், கடலூர, ராமாநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 03 Aug 2025 05:15 PM (IST)

    மாடு மேய்த்து சீமான் போராட்டம்

    தேனி காட்டு பகுதியில் கால்நடைகளை மேய்க்க வனத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 2025 ஆகஸ்ட் 3ஆம் தேதியான இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்புகளை தாண்டி கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • 03 Aug 2025 05:00 PM (IST)

     ரூ.50 லட்சம் பீடி இலை பண்டல் பறிமுதல்

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரை காவல் நிலையத்தினர் மணப்பாடு வடக்கே கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.50 லட்ச மதிப்பிலான பீடி இலை பண்டல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்ததாக தெரிகிறது.

  • 03 Aug 2025 04:45 PM (IST)

    மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 17 வயதான இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். பைக்கில் சென்றுக் கொண்டிருந்தபோது, அவர் வைத்திருந்த சாவி கீழே விழுந்துள்ளது. இதனை அடுத்து, அவர் பைக்கில் இருந்தபடியே, அவருக்கு அருகில் இருந்த இரும்பு குழாயை பிடிப்படி குனிந்தபோது, மின்சார தாக்கில் இளைஞர் வினோத் உயிரிழந்தார்.

  • 03 Aug 2025 04:29 PM (IST)

    ‘என்னோட பிரச்சாரம் வேற மாதிரி இருக்கும்’ பிரேமலதா விஜயகாந்த்

    2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 78 மாதங்களே உள்ளது. இதனையொட்டி, தேமுதிக உள்ளம் தேடி இல்லாம் நாடி என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது. இன்று முதல் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பிரச்சாரத்தை தொடங்கினார். இதுகுறித்து பேசிய அவர், இந்த முறை வேறு மாதிரி வித்தியாசமாக எங்கள் பிரச்சாரம் இருக்கப் போகிறது. நாங்கள் எங்க கூடடணி அமைக்கிறோமோ, அந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதை நோக்கியே எங்கள் பிரச்சாரம்என தெரிவித்தார்.

  • 03 Aug 2025 04:14 PM (IST)

    ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு

    ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் 2025 ஆகஸ்ட் 4ஆம் தேதியான நாளை முழுவதும் திருக்கோயில் முழு நடை அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியை முன்னிட்டு, நாளை ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்படுகிறது.

  • 03 Aug 2025 04:00 PM (IST)

    120 அடியை எட்டும் பவானிசாகர் அணை – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    மழை தொர்ந்து பெய்து வருவதால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டும் தருவாயில் உள்ளது. இதனை அடுத்து, பவானி ஆற்றில் இருந்து உபரி தண்ணீர் திறந்து விடப்படலாம். இதனால், பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

  • 03 Aug 2025 03:45 PM (IST)

    ஓபிஎஸ் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் – டிடிவி தினகரன்

    முன்னாள் முதல்வர் .பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “என்டிஏ கூட்டணியில் இருந்து .பன்னீர்செல்வம் விலகியது அதிர்ச்சி அளிக்கிறது. .பன்னிர்செல்வம் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்கு அழைத்து வர பாஜகவினர் முயற்சிக்க வேண்டும்என கூறினார்.

  • 03 Aug 2025 03:30 PM (IST)

    ஆதாரத்தை காண்பித்த ஓபிஎஸ்

    தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காண்பித்துள்ளார். 2025 ஜூலை 24, ஏப்ரல் 12ஆம் தேதிகளில் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஆதாரமாக ஓ.பன்னீர்செல்வம் காண்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

  • 03 Aug 2025 03:13 PM (IST)

    கனமழை எச்சரிக்கை.. 8 ஆட்சியர்களுக்கு உத்தரவு

    கனமழை எச்சரிக்கையை அடுத்து, 8 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது.

  • 03 Aug 2025 02:50 PM (IST)

    பள்ளி மாணவர் மரணம் – அன்புமணி வலியுறுத்தல்

    திருப்பத்தூர் பள்ளி மாணவன் யுவுராஜின் மர்ம மரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மேலும், கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த மாணவர்களின் மர்ம மரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

  • 03 Aug 2025 02:35 PM (IST)

    தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு

    தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடந்த ஓராண்டில் மட்டும் 6.09 சதவீதம் குறைந்துள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 8.47 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதில் ஆண் குழந்தைகள் 4.37 லட்சமும், பெண் குழந்தைகள் 4.10 லட்சமும் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • 03 Aug 2025 02:15 PM (IST)

    அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? ஜெயக்குமார் விளக்கம்

    அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விலங்குவதாக தகவல் வெளியானது. அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நான் மானஸ்தன். உடல் மண்ணுக்கு உயிர் அதிமுகவிற்கு. யார் வீட்டு வாசல் முன்பும் பதவிக்காக நான் நின்றது இல்லை. நிற்கவும் மாட்டேன்என அவர் கூறியுள்ளார்.

  • 03 Aug 2025 01:50 PM (IST)

    இந்த பொருட்களை வாங்கினார் செல்வம் பெருகும்..

    ஆடிப்பெருக்கு நாளில் நாம் தொட்டதெல்லாம் துளங்கும் என்ற ஒரு பழமொழியும் உள்ளது. ஆடிப்பெருக்கில் நகை ஆபரணங்கள் வாங்க சிறந்த நாளாகும். அந்த வகையில் இந்நாளில் மஞ்சள் நிறத்திலான பூக்கள், ஜவ்வரிசி, கல் உப்பு, பச்சரிசி, ஊறுகாய் போன்ற பொருட்கள் வாங்கி வைக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த பொருட்களை வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் வீட்டில் எப்போதும் உணவுக்கு கஷ்டம் இருக்காது. மேலும் படிக்க.. 

  • 03 Aug 2025 01:33 PM (IST)

    ஆடிப்பெருக்கு.. பெண்கள் சிறப்பு வழிப்பாடு..

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 3, 2025) அதிகாலை முதலில் ஏராளமான மக்கள் காவிரி கரையோரம் திரண்டு புனித நீராடி அங்கு சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அதாவது பெண்கள் ஆற்றில் நீராடிய பின்னர் கரையோரம் இருக்கக்கூடிய படிகட்டு அல்லது மணலில் வாழை இலை போட்டு பழம் பூ உள்ளிட்ட விஷயங்களை வைத்து கற்பூரம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

  • 03 Aug 2025 01:05 PM (IST)

    கலைஞரின் நினைவைப் போற்றுவோம் – முதலமைச்சர் ஸ்டாலின்..

    எப்போதும் மக்களுடன் நிற்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தலைவர் கலைஞர் கட்டிக் காத்த இயக்கம். அவர் இல்லை என்று எண்ணாமல், என்றென்றும் அவர் நினைவுகளில் வாழ்கின்ற கோடிக்கணக்கான உடன்பிறப்புகளில் உங்களில் ஒருவனான நானும் இருக்கிறேன். ஆகஸ்ட் 7 அன்று நம் உயிர்நிகர் தலைவரின் நினைவு நாளில் தமிழர் வாழும் நிலமெங்கும் அவர் நினைவைப் போற்றுவோம்.

  • 03 Aug 2025 01:01 PM (IST)

    புதுக்கோட்டையில் வெளுத்த கனமழை

    தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டையில் கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் ஆறுபோல் தேங்கியது. திடீர் மழையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

  • 03 Aug 2025 12:53 PM (IST)

    தமிழகத்தில் பீகார் வாக்காளர்கள் – ப.சிதம்பரம் கருத்து

    பீகாரை சேர்ந்த 6.50 லட்சம் பேரை தமிழக வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது எஎன முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

  • 03 Aug 2025 12:15 PM (IST)

    நெல்லை கவினின் தந்தைக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு..

    நெல்லையில் கவின் செல்வகணேஷ் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நிலையில்,  தந்தை சரத்குமார் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் என அவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ், பாதுகாப்புக்காக காவல்துறை தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 03 Aug 2025 11:57 AM (IST)

    கவினின் காதலி சுபாஷினியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை..

    நெல்லை ஆணவப்படுகொலை தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியின் பெற்றோர் வீட்டில் தங்கி இருக்கும் கவனின் காதலியான சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

  • 03 Aug 2025 11:37 AM (IST)

    நெல்லை ஆணவப்படுகொலை.. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..

    நெல்லை ஆணவப்படுகொலை வழக்கில் சுர்ஜித்தை கைது செய்த காவல் துறையினர், சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் தம்பதிகளான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி அதாவது சுபாஷினியின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடியிடம் மாற்றப்பட்டது.

  • 03 Aug 2025 11:25 AM (IST)

    நெல்லை ஆணவப்படுகொலை நடந்தது என்ன?

    ஜூலை 27 2025 தேதி அன்று பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு தனது தாத்தாவை அழைத்து வந்த கவிணை சுர்ஜித் தனியாக பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே சுர்ஜித் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பித்து ஓடியுள்ளார்.

  • 03 Aug 2025 11:05 AM (IST)

    இணையத்தில் ஏற்பட்ட காதல்.. 25 சவரன் நகையை பறித்த காதலன்..

    விருதுநகர் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழகத்தின் காரணமாக சுமார் 25 சவரன் நகையை காதலனுக்கு கொடுத்துள்ளார். சந்தேகம் ஏற்பட்டு நகையை திருப்பி கேட்டப்போது அந்த நபர் தர மறுத்ததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் படிக்க

  • 03 Aug 2025 10:48 AM (IST)

    இன்ஸ்டாகிராம் காதல் மூலம் 25 சவரன் நகையை பறிகொடுத்த சம்பவம்

    இன்ஸ்டாகிராம் காதல் மூலம் 25 சவரன் நகையை பறிகொடுத்த சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த விவின் என்ற 22 வயது நபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரிடம் இருந்து விவின் கொஞ்சம் கொஞ்சமாக நகையை வாங்கியுள்ளார்.

  • 03 Aug 2025 10:28 AM (IST)

    மூச்சுத்திண்றி உயிரிழந்த குழந்தை

    வீட்டின் குளியல் அறையில் உள்ள தண்ணீர் வாளியில் குழந்தை தீக்‌ஷா தலை குப்புற கவிழ்ந்து மூச்சுத்திணறி கிடந்துள்ளது. இதனை கண்ட தாய் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

    Read More

  • 03 Aug 2025 10:22 AM (IST)

    தண்ணீரில் வாளியில் மூழ்கி 1வயது குழந்தை பலி

    சென்னை வானகரம் பகுதியில்   1 வயது பெண் குழந்தை, கழிவறையில் இருந்த தண்ணீர் வாளியில் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில், மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • 03 Aug 2025 09:51 AM (IST)

    Aadi Perukku Today : இன்று ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

    இன்று ஆடிப்பெருக்கு கொண்டாட்டப்படுவதை அடுத்து முக்கிய நீர்நிலைகளில் மக்கள் வழிபாடு செய்தனர். தாலிக்கயிறு மாற்றி அம்மனை தரிசனம் செய்தனர். அதிகம் மக்கள் கூடும் நீர்நிலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • 03 Aug 2025 09:37 AM (IST)

    மோசமான நிர்வாக செயல்பாடு – சீமான்

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  தூத்துக்குடியை சேர்ந்த மென்பொறியாளர் கவின் ஆணவ படுகொலை வழக்கில் திமுக அரசின் மெத்தனப்போக்கு மிக மோசமான நிர்வாக செயல்பாடு என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

    Read More

  • 03 Aug 2025 09:18 AM (IST)

    Seeman : ஆணவப்படுகொலை தனிச்சட்டம் – சீமான் கோரிக்கை

    ஆணவப்படுகொலைகளை கட்டுக்குள் கொண்டுவர, தமிழகத்தில்  தனிச்சட்டம் அமைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.  ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டுவருவதில் என்ன சிக்கல் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • 03 Aug 2025 09:03 AM (IST)

    போட்டிபோட்டு பொதுக்குழு கூட்டம்

    அன்புமணி ராமதாஸ் சார்பில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என  அறிவிப்பு வெளியாகியுள்ளது.  மறுபுறம், ஆகஸ்ட் 17, 2025 அன்று கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சின்னம் தொடர்பான அறிவிப்பு அன்புமணிக்கு பலத்தை அதிகரித்துள்ளது

    Read More

  • 03 Aug 2025 08:42 AM (IST)

    PMK Issue : அன்புமணிக்கு வந்த மாம்பழ சின்னம்

    பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு அன்புமணிக்கு வந்துள்ளது. இந்நிலையில் பாமகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன என தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளன.

  • 03 Aug 2025 08:24 AM (IST)

    உடலுக்கு முழு அரசு மரியாதை

    மூளை சாவு அடைந்து அவர்களது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டால், உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு பிறகு 479 பேர் உறுப்பு மாற்று தானம் செய்தனர்.  அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது

    Read more

  • 03 Aug 2025 08:12 AM (IST)

    Organ Donation : உடல் உறுப்பு தானம் – தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம்

    உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து 8வது முறையாக முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 268 பேர் உடல் உறுப்பு தானம் செய்து உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

  • 03 Aug 2025 07:57 AM (IST)

    O. Panneerselvam Statement : ஓபிஎஸ் வைத்த குற்றச்சாட்டுகள்

    பிரதமரை சந்திக்க வேண்டுமென தன்னிடம் சொல்லி இருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததில் எந்தவிதமான உண்மையும் இல்லை என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்

    Read More

  • 03 Aug 2025 07:45 AM (IST)

    நயினார் நாகேந்திரன் உண்மை பேச வேண்டும் – ஓபிஎஸ்

    தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது நயினார் நாகேந்திரன் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • 03 Aug 2025 07:25 AM (IST)

    நாளை எங்கெல்லாம் மழை இருக்கும்?

    ஆகஸ்ட் 4 2025 தேதியான நாளை கோவை, நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது

    Read More

  • 03 Aug 2025 07:07 AM (IST)

    Rain Today : 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால்,  தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு

  • 03 Aug 2025 07:05 AM (IST)

    Weather Forecast Today : ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

    தமிழ்நாட்டில் வெயில் சற்று தணிந்து மழை தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 3 2025 தேதி   இன்று நீலகிரி, கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.