தண்ணீர் வாளியில் விழுந்த 1 வயது குழந்தை.. மூச்சுத்திணறி பலியான சோகம்!
Chennai Kid Death | சென்னை வானகரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த 1 வயது பெண் குழந்தை, கழிவறையில் இருந்த தண்ணீர் வாளியில் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில், மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்த செய்தி கேட்டு பெற்றோர்கள் கதறி அழுதது பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை, ஆகஸ்ட் 03 : சென்னையில் (Chennai) 1 வயது பெண் குழந்தை தண்ணீர் வாளியில் விழுந்து மூச்சுத்திணறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையின் சத்தம் கேட்காமல் இருந்த நிலையில், தாய் கழிவறையில் சென்று பார்த்தபோது, குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தை உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தண்ணீர் வாளியில் விழுந்த ஒரு வயது பெண் குழந்தை – சோக சம்பவம்
சென்னை வானகரம் அடுத்த பாப்பம்மாள் ரெட்டி தெருவை சேர்ந்தவர் அசோத்தமன். 30 வயதாகும் இவருக்கு திருமணம் ஆகி சௌமியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. மூத்த மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, குழந்தையை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ( ஆகஸ்ட் 03, 2025) மாலை மூத்த மகளுக்கு தாய் மருந்து கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், இரண்டாவது குழந்தை தீக்ஷா வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.
இதையும் படிங்க : தூத்துக்குடியில் இரட்டை கொலை.. தோண்ட தோண்ட சடலங்கள்.. கஞ்சா கும்பல் செய்த கொடூரம்!




மூச்சுத்திணறி பரிதாபமாக பலியான குழந்தை – கதறி அழுத பெற்றோர்
சிறிது நேரம் கழித்து குழந்தையின் சத்தம் கேட்காமல் இருந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த தாய், வீடு முழுவதும் தேடி பார்த்துள்ளார். அப்போது வீட்டின் குளியல் அறையில் உள்ள தண்ணீர் வாளியில் குழந்தை தீக்ஷா தலை குப்புற கவிழ்ந்து கிடந்துள்ளார். இதனால அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு, குழந்தையின் பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்த பொதுமக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கனிமொழி – குடும்பத்தினருக்கு ஆறுதல்
இந்த விவகாரம் குறித்து வானகரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.